முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகர விளக்கு பூஜை: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திங்கட்கிழமை, 4 ஜனவரி 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம் - சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 15–ந் தேதி மகர விளக்கு பூஜையை முன்னிட்டு அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வருகிற 15–ந் தேதி மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, அன்று பகல் 1.27 மணிக்கு நெய் அபிஷேகம் முடிந்ததும் பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் ஜோதி வடிவில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவசம் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

இந்தவிழாவில் பங்கேற்கவும், 18–ம் படி ஏறி அய்யப்பனை தரிசிக்கவும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு இருமுடி கட்டி வந்தவண்ணம் உள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை என்பதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சன்னிதானத்தில் 18–ம் படி ஏற பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதுபோல நெய் அபிஷேகம் செய்யவும், அப்பம், அரவணை பிரசாதம் வாங்கி செல்லவும் நீண்ட வரிசை காணப்பட்டது. சபரிமலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 20 கூடுதல் எஸ்.பி.க்கள் தலைமையில் 150 போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட 1700 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களுடன் மத்திய பாதுகாப்பு படை மற்றும் அதிரடிபடையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். சன்னிதானம் செல்லும் பக்தர்கள் தங்களுடன் பெரிய பைகள், தேவையற்ற பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என போலீசார் எச்சரித்து உள்ளனர்.

பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களும் பலத்த சோதனை செய்யப்படுகிறது. ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் பலத்த சோதனை செய்தபிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். இதுபோல பம்பை ஆற்று பகுதியிலும் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது. 15–ந் தேதி மகர விளக்கு தெரியும் பகுதிகளில் இப்போதே பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். அந்த பகுதியிலும் போலீசாரும், வனத்துறையினரும் கண்காணித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்