முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க.வின் மாநில கட்சி அங்கீகாரமும் பறிபோக வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 20 மே 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் தனது வெற்றிவாய்ப்பை இழந்ததோடு டெபாசிட் தொகையையும் இழந்துள்ளார். தேமுதிக மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தையும் இழக்கும் நிலையில் உள்ளது.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ஆர்.குமரகுரு, திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல், தேமுதிக சார்பில் விஜயகாந்த், பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு ஆகியோர் போட்டியிட்டனர். பதிவான வாக்குகள் எண்ணிக்கை உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் தனியார் கலைக் கல்லூரியில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கியது. விஜயகாந்த் போட்டியிடும் தொகுதி என்பதால் அந்த கல்லூரி வளாக பகுதியில் ஏராளமான கட்சியினர் திரண்டிருந்தனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் சுற்றில் திமுக 3960 வாக்குகளும், அதிமுக 2992 வாக்குகளும், தேமுதிக 1494 வாக்குகளும் பெற்றனர். 2-ம் சுற்றிலும் தேமுதிக 3-ம் இடத்திலேயே தொடர்ந்ததால், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே கூடியிருந்த மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக தொண்டர்கள் அங்கிருந்து சோகத்துடன் கலைந்து சென்றனர். 2006 விருத்தாசலத்திலும், 2011 ரிஷிவந்தியத்திலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜயகாந்த், இம்முறை உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்டு தோற்றதோடு, டெபாசிட் தொகையும் இழக்க நேர்ந்தது.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 2,26,120. இதில் அதிமுக வேட்பாளர் குமரகுரு 81,973 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-ம் இடம் பிடித்த திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேல் 77,809 வாக்குகள் பெற்றார். இவரை தொடர்ந்து விஜயகாந்த் 34,474 வாக்குகள் பெற்றார். பாமக வேட்பாளர் 20,233 வாக்குகள் பெற்றார். பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால் தான் டெபாசிட் தொகையை பெறமுடியும். அந்த வகையில் விஜயகாந்த் 34,474 வாக்குகள் மட்டுமே பெற்றதால் அவர் தனது டெபாசிட் தொகையை இழக்க நேர்ந்ததாக உளுந்தூர்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தன் தெரிவித்தார். இவருக்கு அடுத்த படியாக வாக்குகள் பெற்ற பாலுவும் டெபாசிட் தொகையை இழந்தார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது தேமுதிகவே. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 8 சதவீதமாக இருந்த தேமுதிகவின் வாக்கு வங்கி தற்போது வெறும் 2.4 சதவீதம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் பெற ஒரு கட்சியானது அது எதிர்கொள்ளும் தேர்தலில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 6 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் தேமுதிக மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்