முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் கன மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 225 ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2016      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : சீனாவில் கன மழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்தது. மத்திய ஹூபெய் மாகாணத்தில் 2.5 லட்சம் மக்கள் சிக்கிஉள்ளனர்.

சீனாவில் இப்போது கோடை காலம். ஆனாலும் இடியுடன் கூடிய பேய் மழை வெளுத்துக்கட்டியது. வடக்கு மற்றும் மத்திய சீனாவில் இடைவிடாது மழை பெய்தது. ஹூபெய், ஹெனான் மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்கு பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்து சரிந்தன. லட்சக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

பெரும்பாலான இடங்களில் மின்சாரமும், தகவல் தொடர்பும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. மழை, வெள்ளம் தொடர்பான விபத்துக்களில் 176 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியது. மேலும் சடலங்கள் மீட்கப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்து உள்ளது. மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

ஹூபெய் மாகாணத்தில் மட்டுமே மழை, வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி பலரை காணவில்லை. பல ஊர்கள் தீவுகளாக காட்சி அளிக்கின்றன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடுதான். இந்த மாகாணத்தில் 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். 86 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஹெனான் மாகாணத்தில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த மழை காரணமாக 15 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நாசமாகின. இதனால் 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 20 ஆயிரத்து 100 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

மோசமான வானிலை குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்று மக்கள் கொதித்தெழுந்தனர். உள்ளூர் அதிகாரிகள் மீது அவர்கள் சாடினர். பலத்த மழை காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு அரசாங்கம் நிவாரண உதவிகள் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இருப்பினும் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்வதால் அதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. லியோனிங் மாகாணமும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்