முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி தொடரை சமன் செய்தது

புதன்கிழமை, 26 அக்டோபர் 2016      விளையாட்டு
Image Unavailable

ராஞ்சி : நியூசிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடைப்பெற்ற 4-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து, 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி வெற்றிப்பெற்று தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், மொகாலியில் நடந்த 3-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. டெல்லியில் நடந்த 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதையடுத்து தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்தநிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பகல்-இரவு மோதலாக நேற்று நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நடப்பு தொடரில் நியூசிலாந்து அணி டாஸ் வெல்வது இதுதான் முதல் முறையாகும். அதன்படி துவக்க வீரர்களாக களமிறங்கிய குப்தில், லாதம் ஆகியோர் நிதானமாக, அதேசமயம் அடிக்க வேண்டிய பந்தை மட்டும் அடித்து ஆடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி 96 ரன்கள் சேர்த்த நிலையில், லாதம் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த குப்தில் 72 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

விக்கெட் சரியாமல் நிதானமாக விளையாடிய வில்லியம்சன் 41 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் ராஸ் டெய்லரும் தன் பங்கினை சிறப்பாக செய்தார். ஆனால், அவர் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். பின்கள வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்தது. இந்தியா தரப்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், குல்கர்னி, பாண்டியா, அக்சர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

துவக்க வீரர்களாக, ராகனே, சர்மா இறங்கினர். 4.1 ஓவரில் சர்மா 11 ரன்கள் எடுத்திருந்தநிலையில், சோத்தி பந்தில் வேட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரகானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 57 ரன்கள் எடுத்தார். 2-வது விக்கெட்டாக, 3-வது ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 45 ரன்களில் வீழ இந்திய அணியின் வெற்றி கனவு தகர்ந்தது என்றே சொல்லலாம்.  3 விக்கெட்டாக ரகானே 57 ரன்களில் வீழ்ந்தார். இந்திய அணியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இவரது ஸ்கோராகும். அடுத்து களமிறங்கிய வீரர்களில் படேல், குல்கர்னி தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் அவுட்டாக இந்திய அணி 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில வெற்றிப்பெற்றது. இந்த வெற்றி மூலம் நடப்பு தொடரில் இந்த அணி பெறும் 2-வது வெற்றி இது.

நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோத்தி 3 விக்கெட்டுகளும், போல்ட், நீசாம் தலா 2 விக்கெட்டுகளும், சாண்ட்னர், சோடி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து வீரர் குப்தில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்