முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களை கஷ்டப்படுத்தி விட்டு மோடி கண்ணீர் நாடகம்: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, மக்களை கஷ்டப்படுத்தி விட்டு மோடி கண்ணீர் சிந்தி நடிக்கிறார் என திருநாவுக்கரசர் குற்றச்சாட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் நேருவின் 128-வது பிறந்த நாள் விழாவை காங்கிரசார் நேற்று  கொண்டாடினார்கள். இதையொட்டி சத்திய மூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.அதைத் தொடர்ந்து நேருவை பற்றிய கருத்தரங்கை திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார். இதில் குமரி அனந்தன், கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோர் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சி முடிந்ததும் திருநாவுக்கரசர் நிருபர்களி டம் கூறியதாவது :-

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அவசர கோலத்தில் சர்வாதிகாரி போல் மோடி அறிவித்துள்ளார். பணத்தை மாற்ற முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். வரிசையில் நிற்க முடியாமல் சிலர் மயக்கம் அடைந்துள்ளனர். மரணமும் நிகழ்ந்துள்ளது.இதற்கு மோடிதான் பொறுப்பேற்க வேண்டும். மக்களின் கஷ்டங்கள் தெரியாமல் மோடி வசனம் பேசுகிறார். மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க கண்ணீர் சிந்தி நடிக்கிறார். ஆனால் மக்களின் கோபத்தில் இருந்து அவர் தப்பிக்க முடியாது. கருப்பு பணத்தை ஒழிப்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் செய்தது தவறு. புதிய ரூ.500 நோட்டுக்கள் வரவில்லை. ரூ.100-ம் போதிய அளவில் இல்லை. இதையெல்லாம் சீர்செய்து தர வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டரிடமும் இன்று காங்கிரசார் மனு கொடுக்கின்றனர். கிராமப்புறங்களில் வங்கி கணக்கு கிடையாது. எனவே கூட்டுறவு சங்கங்கள் மூலம் பணத்தை மாற்றிக் கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.மத்திய அரசு திட்டம் என்று மாநில அரசு மெத்தனத்துடன் இருந்து விடக்கூடாது.முதல்-அமைச்சர் ஜெயலலிதா கையெழுத்து போட்ட அறிக்கை வெளியாகி இருப்பது மகிழ்ச்சிதான். அடுத்தடுத்து வரும் அறிக்கைகளில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் இடம்பெறும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்