முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல கோடி மோசடி வழக்கில் பட அதிபர் மதனுக்கு 7 நாள் போலீஸ் காவல்

புதன்கிழமை, 23 நவம்பர் 2016      சினிமா
Image Unavailable

சென்னை : பல கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பட அதிபர் மதனுக்கு 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.ஆர்.எம். பல்கலை கழகத்தில் மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி தருவதாக கூறி 123 பேரிடம் ரூ.85 கோடியை சுருட்டிய சினிமா பட அதிபர் மதன் கடந்த மே மாத இறுதியில் தலைமறைவானார். கடந்த 5.5 மாதங்களாக மதனை போலீசாரால் தேடப்பட்டு வந்த மதன் திருப்பூரில் சிக்கினார். தனது தோழி வர்ஷா வீட்டில் பதுங்கி இருந்த போது பிடிபட்ட மதனை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மோசடி பணத்தை மதன் எங்காவது பதுக்கி வைத்துள்ளாரா? இல்லை ரூ.85 கோடியையும் யாருக்காவது பிரித்து கொடுத்தாரா? என்பது பற்றி மதனிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. மதனுக்கு 2 மனைவிகள் உள்ளனர். சென்னையை சேர்ந்த கீதாஞ்சலி, திருப்பூர் வர்ஷா ஆகியோரும் மதனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். இதனால் இவர்களது பெயரில் மதன் எங்காவது சொத்துக்களை வாங்கி குவித்துள்ளாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதே நேரத்தில் மதன் பெயரில் உள்ள சொத்துக்கள் பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். வெளி மாநிலங்களில் தங்கி இருந்த போது உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கேயில் வீடு ஒன்றையும் மதன் வாங்கி இருக்கிறார். இப்படி வெளி மாநிலங்கள் பலவற்றிலும் மதன் சொத்துக்களை வாங்கி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

இதுதொடர்பாக விசாரிக்கவும், மோசடி பற்றிய பல்வேறு தகவல்களை திரட்டவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக மதனை 10 நாள் காவலில் எடுக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.

இதற்காக சைதாப்பேட்டை கோர்ட்டில் மதன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். புழல் சிறையில் இருந்து பாதுகாப்புடன் மதனை அழைத்து வந்த போலீசார் காலை 11 மணி அளவில் கோர்ட்டு வளாகத்துக்குள் அழைத்துச் சென்றனர். மதனை 10 நாள் காவலில் எடுப்பது தொடர்பான மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மோசடி தொடர்பாக மதனிடம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 10 நாட்கள் காவலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் கோர்ட்டில் தெரிவித்தனர். இதற்கு மதன் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மதனை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. நவம் 29-ந் தேதி வரை அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவுள்ளனர்.

போலீஸ் காவலின் போது, மதனிடம் மோசடி தொடர்பாகவும், சொத்துக்கள் தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை கேட்க போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். அப்போது மதனின் மோசடி வித்தைகள் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்