பணிகளை செய்ய உடலளவிலும், மனதளவிலும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      நீலகிரி
கலெக்டர் பேச்சு

பணிகளை செய்ய நம்மை உடலளவிலும், மனதளவிலும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என ஊட்டியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் கூறினார்.

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மேம்பாடு மற்றும் செயல் திறன் குறித்த பயிற்சி கூட்டம் ஊட்டியிலுள்ள சிறுவர் மன்ற அரங்கில் நேற்று நடைபெற்றது. காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமை தாங்கி பேசியதாவது_

                                     வார விடுமுறை

அரசுத்துறைகளில் உள்ளவர்களுக்கு பொதுவாக மன அழுத்தங்கள் இருக்கும். அதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் காவல்துறைக்கு மிக அதிகம். அத்துறையைச் சார்ந்தவர்களுக்கு வாரவிடுமுறை கிடையாது. திருவிழா கிடையாது. தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்கள் எதுவுமே கிடையாது. அன்றைய தினத்தில் தான் பணிச்சுமை அதிகமாக இருக்கும்.

                                     பிராணவாயு

காவல்துறை பணி என்பது ஒருவரின் சுவாசத்திற்கு பிராண வாயு போன்றது. ஒருவர் இருக்கும்போது தெரியாது. இல்லாத போது தான் தெரியும். மக்கள் பணி என்பது மகேசன் பணி என்பார் முன்னோர்கள். அதற்கு எடுத்துக்காட்டாக காவல்துறை பணி. காவல்துறை பணியில் உள்ளவர்களுக்கு பிள்ளைகளிடம் பேச நேரம் கூட கிடைக்காது. அலுவலக பணி நேரம் போக மீதி கிடைக்கும் நேரங்களில் தங்கள் பெற்றோர், மனைவி, குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி தங்கள் பணிச்சுமையின் விளைவாக வரும் மன உளைச்சலை குறைத்துக்கொள்ளலாம்.

                                       கடமையாக எடுத்தால் எளிது

அப்பொழுதுதான் தங்களுடைய பணியில் அதிக கவனம் செலுத்த முடியும். மன உளைச்சலில் இருந்தும் விடுபடலாம். பணிகளை செய்ய நம்மை உடலளவிலும், மனதளவிலும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். கடினமான வேலையையும் திறமையாக எடுத்துச் செய்ய வேண்டும். பணியை பாரமாக எடுத்தால் பாரமாக இருக்கும். தங்கள் கடமையாக எடுத்துக்கொண்டால் எளிதாக இருக்கும். எனவே இந்த பயிற்சி வகுப்பினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பேசினார்.

பயிற்சி முகாமில் தன்னார்வ தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: