முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பார்லி. குழுவிடம் நேரில் விளக்கம்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பழைய ரூபாய் 500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற முடிவு குறித்த பேச்சு வார்த்தையை அரசு கடந்த ஆண்டு துவக்கத்திலேயே  ஆரம்பித்தது  என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பாராளுமன்ற குழுவிடம் விளக்கம் அளித்தார். இந்த குழுவில் இடம் பெற்றிருந்த பா.ஜ.கவை தவிர இதர உறுப்பினர்கள் அது பற்றி உர்ஜித் படேலிடம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பினர்.

பிரதமரின் அதிரடி அறிவிப்பு

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று  தொலைக்காட்சியில் தோன்றி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். கறுப்பு பணம், வரி ஏய்ப்பு, ஊழல், தீவிரவாதத்திற்கு நிதி செல்லுதல் ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.

இதனைத்தொடர்ந்து நாட்டு மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றினார்கள். அவர்கள் ஏறக்குறைய இரண்டு மாதம் பழைய ரூபாய் நோட்டை மாற்ற  வங்கிகளில் தொடர்ந்து குவிந்தார்கள்.

மத்திய அரசு பிடிவாதம்

இதனால் சாதாரண, நடுத்தர, ஏழை மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. மக்களை அவதிப்படுத்தும் ரூபாய் நோட்டு முடிவை அரசு திரும்ப பெற வேண்டும் என முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலியுறுத்துகின்றன. இருப்பினும் அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது.

இந்த நிலையில், ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலிடம் பாராளுமன்ற குழு நேற்று விளக்கம் கேட்டது. அப்போது, ரூபாய் நோட்டு குறித்த முடிவை எடுப்பதற்கான பேச்சு வார்த்தை கடந்த ஆண்டு துவக்கத்திலேயே மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே துவங்கி விட்டது என அவர் விளக்கம் அளித்தார்.

அப்போது ரிசர்வ் வங்கிக்கு உள்ள தன்னாட்சி அதிகாரம் குறித்து, காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இந்த விசாரணையின் போது பாராளுமன்ற குழுவில் இடம் பெற்றிருந்த பா.ஜ.க . உறுப்பினர்கள் அதிக அளவில் கேள்வி கேட்கவில்லை. பாராளுமன்ற குழுவிற்கு காங்கிரஸ் தலைவர்  வீரப்ப மொய்லி தலைவராக உள்ளார். இந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் உள்ளார். அவர் ரூபாய் நோட்டு முடிவானது நிர்வாக செயலிழப்பு என்று கூறினார். அதே நேரத்தில், ரூபாய் நோட்டு குறித்து சில கேள்விகளையும் அவர் ரிசர்வ் வங்கி கவர்னரிடம் கேட்டார்.

இந்த ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் வருகிற 20-ம் தேதியன்று பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ள நிலையில் அவர் நேற்று பாராளுமன்ற குழு முன்பாக ஆஜராகி ரூபாய் நோட்டு விளைவு குறித்து விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்