தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கம் தொடர்பாக விஷால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      சென்னை

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக விஷால் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், கடந்த ஆகஸ்டு மாதம் வார பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதையடுத்து தயாரிப் பாளர் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து நடிகர் விஷாலை 3 மாதத்துக்கு இடைநீக்கம் செய்து அச்சங்கத்தின் தலைவர் தாணு உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு மனுவில், அவதூறாக எந்த கருத்தையும் தான் தெரிவிக்கவில்லை என்றும் தன்னை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘தான் தெரிவித்த கருத்துக்கு விஷால் வருத்தம் தெரிவித்தால், அவரது இடை நீக்கம் உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீ லிக்கப்படும்’ என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.இதையடுத்து நடிகர் விஷால், தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து ஒரு மனுவை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கு கடந்த 6-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, விஷாலை இடைநீக்கம் செய்த உத்தரவை திரும்பப் பெற முடியாது என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், வருத்தம் தெரிவிப்பதாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த விஷால், ஏற்கனவே தெரிவித்த தரக்குறைவான, அவதூறான கருத்துக்களை மீண்டும் ஒரு டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவரது இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று கூறப்பட்டிருந்தது.இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தன்னை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்ற விஷாலின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: