தைப்பூசத் திருவிழா : பழனியில் குவியும் பக்தர்கள்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      ஆன்மிகம்
palani temple(N)

மதுரை -  தைப்பூசத் திருவிழா நாளை  கொண்டாடப்பட உள்ளதையொட்டி, பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள முருகப்பெருமானின் திருக்கோயில்களில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.  முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாகத் தொடங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் முத்துக்குமார சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

 திருக்கல்யாணம் :
 இன்று திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் 9ம் தேதி நடைபெறுகிறது. 12ம் தேதி தெப்பத் தேரோட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மயில் பீலிக்காவடி, பால் காவடி, சர்க்கரைக் காவடி என பல்வேறு விதமான காவடிகளை எடுத்து பாத யாத்திரையாக பழனி வந்த வண்ணம் உள்ளனர்.

சிறப்புப் பேருந்துகள் :
பக்தர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சுமார் 350 சிறப்புப் பேருந்துகள் பழனியிலிருந்து அனைத்து ஊர்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் வழியாக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வதால், ஒட்டன்சத்திரம்-பழனி தேசிய நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதுடன், பக்தர்கள் பாதுகாப்பாக தங்கவும், பாத யாத்திரை மேற்கொள்ளவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


 திருச்செந்தூரில் தைப்பூச விழா :
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும் பக்தர்கள் பாதயாத்திரையாகச் சென்று வழிபாடு மேற்கொள்கின்றனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று முருகப்பெருமானை தரிசிக்கின்றனர். வாயில் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: