ஓ.பி.எஸ் சிரித்ததை காரணம் காட்டுவதா ? சசிகலாவுக்கு ஸ்டாலின் கண்டனம்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      அரசியல்
mk stalin(N)

சென்னை  - அதிமுகவுக்குள் நிலவும் காட்சிகளுக்கு, என்னைப் பார்த்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிரித்ததுதான் காரணம் என்று கூறுவது விசித்திரமானது, வெட்கக் கேடானது" என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம்  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்ட அறிக்கையில், "எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்" என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது உதவாக்கரை வாதம் போன்று இருக்கிறது. நினைத்த வேகத்தில், குறுக்கு வழியில் முதல்வர் ஆக முடியவில்லை என்ற ஏக்கத்தில் 'எதைத் தின்னால் பித்தம் தெளியும்' என்ற போக்கில் தி.மு.க. மீது போலி விமர்சனத்தை வைத்துள்ளதாகவே கருதுகிறேன்.

ஆளுநரால் நியமிக்கப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை போயஸ் தோட்டத்திற்கு வர வைத்து, இரண்டு மணி நேரம் மிரட்டி, ராஜினாமா கடிதம் பெற்ற சசிகலா நடராஜன், அதிமுக தொண்டர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க இப்படி தி.மு.க. மீது பழி போடுவது அரைவேக்காட்டுத்தன அரசியல். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாகவும், வெளியில் அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்கும் கட்சியாகவும் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற போது அந்த நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் பங்கேற்றேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். அன்று முதல்வராக இருந்த ஜெயலலிதாவே அதற்காக எனக்கு நன்றி தெரிவித்ததை தோழி என்று சொல்லிக் கொள்ளும் சசிகலா நடராஜனுக்கு தெரியாமல் இருப்பது எப்படி? ஏன் சட்டமன்றத்திலேயே நேருக்கு நேர் நானும் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் பரஸ்பரம் வணக்கம் செலுத்தி சிரித்துக் கொண்டிருக்கிறோம். ஜெயலலிதாவைப் பார்த்து சசிகலா நடராஜன் இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க முடியுமா? என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: