முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா-மணிப்பூரில் ஜனநாயகத்துக்கு அவமானம் நடந்துள்ளது: ராகுல் காந்தி

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஜனநாயகத்திற்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் மக்கள் அதிகாரம் பண அதிகாரத்தால் பறிக்கப்பட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

கோவா மாநிலத்தில் 40 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இதில் 17 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. பாரதிய ஜனதா 13 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனால் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவி ஏற்றுள்ளார்.

மேலும் மணிப்பூர் மாநிலத்தில் 60 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பாரதிய ஜனதா 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. பாரதிய ஜனதா குறைந்த தொகுதிகளில் வெற்றிபெற்றாலும் இதர கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.
இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றிபெற்றாலும் பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க அந்த மாநில கவர்னர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோவா மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. ஆனால் மறுநாளே மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதித்துள்ளது.

இந்தநிலையில் கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ஜனநாயகம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது மக்களின் கட்டளை திருடப்பட்டுள்ளது என்று பாரதிய ஜனதா மீது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாரபட்சம்:

கோவா மாநில கவர்னர் பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். கோவாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க கவர்னர் உதவி செய்துள்ளார். கோவா மற்றும் மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. ஆனால் மக்கள் அளித்த இந்த தீர்ப்பை பாரதிய ஜனதா தனது பணபலத்தால் பறித்துள்ளது என்று ராகுல் காந்தி நேற்று பாராளுமன்றத்திற்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

பாரதிய ஜனதாவுடன் நாங்கள் கொள்கை ரீதியாக போராடி வருகிறோம். கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடந்துள்ள விஷயங்கள்தான் பாரதிய ஜனதாவின் கொள்கையாகும் என்றும் ராகுல்காந்தி கூறினார்.

கோவா மாநிலத்தில் நாங்கள் ஆட்சி அமைக்க கோரும் முன்பு மனோகர் பாரிக்கருக்கு அந்த மாநில கவர்னர் கடிதம் எழுதியுள்ளார் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்