முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா-மணிப்பூர் விவகாரம்: ராஜ்யசபையில் காங்கிரசார் அமளி

புதன்கிழமை, 15 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைத்திருப்பதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையொட்டி ஏற்பட்ட அமளியால் சபையே முடங்கியது. நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை.

பாராளுமன்ற ராஜ்யசபை நேற்று கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். கோவா, மணிப்பூர் மாநில கவர்னர்களை நீக்கிவிட்டு அந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் அரசை அமைக்க வேண்டும் என்று கோரினர். காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தோடு அமளியில் ஈடுபட்டதால் சபை நேற்று பிற்பகல் 3.10 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆசாத்:

ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் எழுந்து பேசுகையில் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் காங்கிரஸ் தனிப்பட்ட முறையில் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அப்படியிருந்தும் கவர்னர்கள் மூலம் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பாரதிய ஜனதா அரசு அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தை மீறியும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராகவும் அந்த மாநிலங்களில் பாரதிய ஜனதா அரசு அமைக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று ஆசாத் மேலும் கூறினார். இரண்டு மாநிலங்களின் கவர்னர்கள் நீக்கப்பட்டு அங்கு காங்கிரஸ் முதல்வர்கள் அரசு அமைக்க வேண்டும் என்று சபையின் காங்கிரஸ் துணைத்தலைவர் கோரினார்.

ஜெட்லி பதில்:

கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஜனநாயக விதிமுறைகளின்படிதான் பாரதிய ஜனதா அரசு அமைக்கப்பட்டுள்ளது என்று ராஜ்யசபையின் ஆளும் கட்சி தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான அருண்ஜெட்லி பதில் அளித்தார்.

அந்த இரண்டு மாநிலங்களில் தொங்கு சட்டசபை ஏற்பட்ட பிறகு பிற கட்சிகளின் ஆதரவுடன் பாரதிய ஜனதா அரசு அமைத்துள்ளது. மாநில கவர்னருக்கு இரண்டு வழிகள்தான் உள்ளது. மெஜாரிட்டியுடன் வெற்றிபெற்ற கட்சியை அரசு அமைக்க அழைப்பது மற்றொன்று பெரும்பான்மையுடைய கூட்டணியை அரசு அமைக்க அழைப்பது. இந்த இரண்டு வழிகள்தான் கவர்னருக்கு உள்ளது.

இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு 80 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா  அதிகபட்சமாக 3o தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆனால் அரசு அமைக்க பாரதிய ஜனதாவை கவர்னர் அழைக்கவில்லை.  17 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவை கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து அரசு அமைக்க கவர்னர் அழைத்தார். கடந்த 1988-ம் ஆண்டு வாஜ்பாய் அரசு பதவியில் இருந்தபோது அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ள கூட்டணியை அரசு அமைக்க கவர்னர் அழைக்கலாம் என்று கூறியிருக்கிறார். சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில் காங்கிரஸ் கூறியதை கோர்ட்டு ஏற்கவில்லை. சபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையுள்ள பாரதிய ஜனதாவை அரசு அமைக்க கவர்னர்கள் அழைத்துள்ளனர். பாரதிய ஜனதாவும் கடிதம் மூலம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பெயரை குறிப்பிட்டிருப்பதோடு அவர்களை கவர்னர் முன்பும் ஆஜர்படுத்தினர். அதன் பின்னரே பாரதிய ஜனதாவை அரசு அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். சிறுபான்மையான காங்கிரஸை அரசு அமைக்க கவர்னர் அழைக்கமாட்டார். இதற்கு ஜனநாயகத்தில் இடம் இல்லை. மெஜாரிட்டி உள்ள ஒரு கூட்டணியைத்தான் அரசு அமைக்க கவர்னர் அழைப்பார். இதுதான் ஜனநாயகத்தின் கொள்கையாகும். மேலும் காங்கிரசும் அரசு அமைக்க உரிமை கோரவில்லை. ஒரு நள்ளிரவில் காங்கிரஸ் சார்பாக  ஒரு கடிதத்தை மட்டும் கவர்னர் மாளிகையின் வளாகத்தில் வீசப்பட்டிருக்கிறது. அந்த கடிதத்தில் கவர்னரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி மட்டும் கோரப்பட்டுள்ளது என்று அருண்ஜெட்லி மேலும் விளக்கம் அளித்தார்.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்