முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கடும் அமளி மாநிலங்களவை முடங்கியது - ஒத்திவைப்பு

புதன்கிழமை, 15 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - கோவா, மணிப்பூர் கவர்னர்களின் செயல்பாடுகளை விமர்சித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

தனிப்பெரும் கட்சியாக ...
மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மெஜாரிட்டி பெறாவிட்டாலும், அதிக தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், மாநில கவர்னர்களோ, காங்கிரசை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காமல் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அதிகம் உள்ள பா.ஜ.க.வுக்கு அழைப்பு விடுத்து பதவிப்பிரமாணமும் செய்து வைத்துள்ளனர்.

நியாயப்படுத்திய பா.ஜ.க.
இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது. ஆனால், தங்களிடம் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருந்ததால் கவர்னர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததாக பா.ஜ.க. நியாயப்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தை நேற்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பினர். மத்திய அரசின் ஆணையை ஏற்று கவர்னர்கள் செயல்பட்டதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். இதன் காரணமாக அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது.

அவை ஒத்திவைப்பு
அவையை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலையில், அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய மாநிலங்களவை பா.ஜ.க. தலைவர் அருண் ஜெட்லி, ‘ஆட்சியமைப்பது தொடர்பாக கவர்னர் முன்பு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைப்பது, மற்றொன்று எந்த கட்சியால் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோர முடியுமோ அந்த கட்சியை அழைக்கலாம். காங்கிரசின் வாதங்களை உச்ச நீதிமன்றமும் ஏற்கவில்லை’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்