முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடற்படை விமான தள 8-ம் ஆண்டு நிறைவு விழா

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் அமைந்துள்ள ஐ.என்.எஸ்.பருந்து கடற்படை விமானதள 8-ம் ஆண்டு நிறைவுவிழா வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளம் அமைந்துள்ளது. இந்த ஐ.என்.எஸ். பருந்து தொடங்கப்பட்ட பின்னர் 8-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. கொச்சியில் இருந்து வந்திருந்த கலைக்குழுவினரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த விழாவின் நிறைவாக ஐ.என்.எஸ்.பருந்து விமான தளத்தின் கமாண்டன்ட் விஷால்ராய் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் எழில்மிகு வகையில் அமைந்துள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளம் தொடங்கப்பட்டு 8-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த விமானதளம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடந்த 1944-ம் ஆண்டு விமான தளமாக தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தநிலையில் சுதந்திரத்திற்கு பின்னர் இந்த தளம் ராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. மன்னர்களின் பராமரிப்பில் இருந்து வந்த இந்த விமான தளம் அதன்பின்னர் இந்திய விமான போக்குவரத்து துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டு கடந்த 1982-ம் ஆண்டு வரை பயணிகள் விமான தளமாக செயல்பட்டு வந்தது. இதன்பின்னர் இந்த விமான தளம் இலங்கையில் உள்நாட்டு போர் வெடித்த காரணத்தினால் பாதுகாப்பு கண்ணோட்டத்தில் இலங்கையின் அருகாமையில் கடற்கரை பகுதியாக உள்ள இந்த மாவட்டத்தில் கடற்படை விமான தளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து இந்த விமானதளத்தினை கடற்படையின் கீழ் கொண்டு வந்தது. கடந்த மார்ச் 2009-ம் ஆண்டு இந்த கடற்படை தளம் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமானதளமாக உருவாக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

     இந்த கடற்படை தளத்தின் வீரர்கள் இந்திய கடல்பகுதியில் பாக்ஜலசந்தி, மன்னார்வளைகுடா மற்றும் வடஇந்திய கடற்பகுதியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு மக்களை காப்பாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கடற்படையில் அதிகளவில் இளைஞர்கள் சேர வேண்டும். இதற்கு தேவையான கல்வித்தகுதி, உடல்தகுதி, தனித்திறன் போன்றவற்றை வளர்த்துக்கொண்டு கடற்படையில் சேர்ந்து நாட்டின் பாதுகாப்பிற்காக பணியாற்ற வேண்டும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு நாட்டின் பாதுகாப்பு பணியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தினை சிறுவயது முதலே குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின்மீது பற்று ஏற்பட்டு நாட்டுக்காக பணியாற்ற முன்வருவார்கள். இதற்கு பெற்றோர் உதவிட வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் கடற்படை விமான தள அதிகாரிகள், படைவீரர்கள், பணியாளர்கள், அவர்தம் குடும்பத்தினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக வண்ணமிகு வாணவேடிக்கைகள் நடைபெற்றன. விழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்