டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

வியாழக்கிழமை, 30 மார்ச் 2017      சேலம்

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், சேலத்தில் இரு வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு மிக அருகே உள்ள செல்போன் டவரில் ஏறிய தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த இளைஞர்கள் பத்துக்கும் மேற்பட்டோர், விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என்றும், விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோசங்கள் எழுப்பினர். இளைஞர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, சுமார் அரை மணி நேர போராட்டத்தை கைவிட்ட இளைஞர்கள், விவசாயிகளின் போராட்டம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்தனர்.இதே போன்று சேலம் மாநகரின் முக்கிய பகுதியான வள்ளுவர் சிலை அருகே திடீர் என்று மறியலில் ஈடுபட்டு, விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பிய இரண்டு மாணவிகள் உள்பட பத்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து, மாணவ மாணவியர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவர்கள் கூறும் போது, விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: