இன்று முதல் விஜயகாந்த் ஆர்.கே.நகரில் பிரசாரம்

சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2017      அரசியல்
vijayakanth(N)

சென்னை - தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று முதல் ஆர்.கே. நகரில் தனது கட்சி வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தே.மு.தி.க தொண்டர்களிடையே சுணக்கத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் மேற்கொள்ளும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், இந்த மருத்துவ பரிசோதனை முடிவடைந்ததும் ஓரிருநாளில் விஜயகாந்த் வீட்டுக்கு திரும்புவார் என்றும் தே.மு.தி.க வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.

விஜயகாந்த் விரைவில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று பிரேமலதாக கூறியிருந்தார். தேமுதிக நிர்வாகிகள், பிரேமலதா ஆகியோர் பிரச்சாரம் செய்து வந்தனர்,மருத்துவமனையில் இருந்த விஜயகாந்த் கடந்த வாரம் குணம் அடைந்து ஏப்ரல் 2  ம் தேதி வீடு திரும்பினார். சில நாட்கள் அவர் வீட்டில் ஓய்வு எடுத்த பின்பு ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்பட்டது.வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 தினங்களே உள்ளன. இன்னும் சில தினங்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும், ஆளுக்கு முதலாக வேட்பாளரை அறிவித்த விஜயகாந்த் இன்னமும் ஆர்.கே. நகர் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை என்று தேமுதிக தொண்டர்கள் சோர்வடைந்திருந்தனர். இந்த நிலையில் விஜயகாந்த் இன்று முதல் பிரச்சாரம் செய்வார் என்று தேமுதிக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. எனவே பிரச்சாரம் இனிமேல் சூடுபிடிக்கும்  என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: