முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு இணை சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் வாகனங்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களில் ஒன்றான இணை சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் வாகனங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.58,690 விலையிலான ரூ.20 இலட்சத்து 54 ஆயிரத்து 150 மதிப்பிலான வாகனங்களை மாவட்ட கலெக்டர் திரு.பா.பொன்னையா இ.ஆப., அவர்கள் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த இரு கால்கள் பாதிக்கப்பட்ட 35 மாற்றுத்திறனாளிகளும் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு, இணை சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்களை மாவட்ட கலெக்டர் அவர்களால் வழங்கப்பட்டது.

 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, தாங்குக் கட்டைகள், காலிபர், செயற்கைக்கால், காதொலிகருவிகள், இணை சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 

யுடிஐடி எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக அடையாள அட்டைகளைப் பெற இணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பப்படிவங்களும் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

 

இது குறித்து மாவட்ட கலெக்டர் குறிப்பிடும் போது உபகரணங்கள் தேவையுள்ளவர்கள் தங்களது மாhற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையின் நகல், ஆதார் அட்டையின் நகல், குடும்ப அட்டையின் நகல் ஆகியவற்றோடு வெள்ளைத்தாளில் எழுதப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஜி.எஸ்.டி.சாலை, கோர்ட் அருகில் செங்கல்பட்டு, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என தெரிவித்தார்.

 

மேலும் கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிகள் தையல் பயிற்சி பெற்றிருந்தால் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் வழங்கப்படும் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்களைப் பெறவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோசப் டி.ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்