முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்குரிய சான்றிதழ்களை இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம்: கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தகவல்

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை, ஏப். 13: திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை ஆன்-லைன் மூலமாக நேர்த்தியாகவும், வெளிப்படையாகவும் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்கும் பணிக்காக பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 254 வட்ட அலுவலகங்களில் 236 வட்ட அலுவலகங்களில் தமிழ நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் பொது சேவை மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் 136 தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்கள் மற்றும் 207 புதுவாழ்வுத் திட்டம் மூலம் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்கள், 120 மக்கள் கணினி மையங்கள் பொது சேவை மையங்களாக செயல்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 வட்ட அலுவலகங்களிலும் தமிழ் நாடு அரசு கேபிள் டிவி மூலமாக தலா ஒரு பொது சேவை மையம் ஏற்படுத்தப்பட்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல் சான்றிதழ்கள் பெறப்பட்டு வருகிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியம். வருவாய்த் துறையின் சான்றிதழ்களை பெற விரும்பும் நபர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்குச் (தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள்) சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். புதியதாக பதிவு செய்பவர்களுக்கு அடிப்படையான தகவல்களை பதிந்து நாட்டிற்கே பொதுவான குடிமகன்களுக்கென பிரத்யோக எண் வழங்கப்பட்டுவிடும். இவ்வெண்ணைக் கொண்டு எதிர்காலத்தில் தேவைப்படும் அனைத்து சான்றிதழ் மற்றும் பிறதேவைகளுக்கும் இந்த எண்ணைப் பயன்படுத்தி சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். மீண்டும் மீண்டும் ஆதாரங்களை வழங்க வேண்டியதில்லை. மேலும் தற்போது தேவைப்படும் சான்றுக்குரிய பிரத்யோக ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். உடனே அந்த பதிவு ஆன்லைன் மூலம் கிராம நிர்வாக அலுவலருக்கு செல்லும். கிராம நிர்வாக அலுவலர் அதனை பரிசீலனை செய்து ஒப்புதல் அளிப்பார். அவருடைய ஒப்புதலுக்கு பிறகு வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியருக்கு ஆன்லைன் மூலமாக செல்லும். வட்டாட்சியர் ஒப்பதல் பெற்றவுடன் விண்ணப்பதாரரின் கைபேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். உடனே பொது சேவை மையத்திற்கு சென்று சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். முன்பு போன்று ஒவ்வொரு அலுவலகமாக சென்று காத்திருக்க தேவையில்லை. வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு ஒரு கடவுச் சொல் (பாஸ்வேர்டு) வழங்கப்பட்டு உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களின் அலுவலகத்தில் இல்லை என்றாலும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினியின் உதவியால் எங்கேயிருந்தாலும் மனுக்களை கவனித்து, சான்றிதழ்களுக்கு ஒப்புதல் கொடுக்க முடியும். சரியான ஆவணங்களை கொடுத்து இருந்தால் சில மணி நேரங்களில் சான்றிதழ்கள் பெற முடியும். இந்த பொது சேவை மையத்தில் வருவாய்த் துறையில் சான்றுபெற ரூ.60ம், சமூக நலத் துறை மூலம் சான்று பெற ரூ.120ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கலெக்டர், ஆர்.டிஓ. ஆகியோர் அன்றாடம் இந்த திட்டத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து கண்காணித்து வருகின்றனர். இத்தனை வகையான சேவைகள் அளிக்கப்படும் நிலையில் இது குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த திட்டத்தில் மூலம் இடைத்தரகர்களின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் பல சான்று நகல்களை பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சான்றிதழ்களின் மெய்த்தன்மை குறித்த ஐயப்பாடும் எழாத வண்ணம் இச்சான்றிதழ்களிலேயே இரகசிய குறியீடும் அதனை சம்பந்தப்பட்ட நபர்கள், அலுவலர்கள் சரிபார்த்துக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இச்சேவையைப் பயன்படுத்தி பெருவாரியான அளவில் பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்குரிய சான்றிதழ்களை இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்