ஒடிசா மாநிலத்திலும் வெற்றிபெற பா.ஜ.க. முயற்சி செய்யும்: வெங்கையா நாயுடு

சனிக்கிழமை, 15 ஏப்ரல் 2017      அரசியல்
Venkaiah Naidu 2017 01 10

புவனேஸ்வர், ஒடிசா மாநிலத்திலும் பாரதிய ஜனதா வெற்றிபெற முயற்சி செய்யும் என்று கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிமன்றக்குழுக்கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பா.ஜ.தலைவர்கள், முதல்வர்கள் மற்றும் முக்கிய நபர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக புவனேஸ்வரம் வந்த மத்திய கேபினட் அமைச்சர் வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பா.ஜ. முயற்சி:-

அப்போது அவர் கூறுகையில் ஒடிசா மாநிலத்திலும் வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா முயற்சி செய்யும் என்றார்.
ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது. இதில் 297 ஜில்லா பரிஷத்களிலும் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெறும் 60 ஜில்லா பரிஷத்துகளிலும் வெற்றிபெற்றது. அதேசமயத்தில் ஆளும் பிஜூ ஜனதாதளம் 473 ஜில்லா பரிஷத்துகளில் வெற்றிபெற்று தனது தனித்தன்மையை நிலைநிறுத்தியது.

மோடி தலைமை:-

மேற்குவங்க மாநிலத்தில் காந்தி தக் ஷின் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அதில் பாரதிய ஜனதா 2-வது இடத்தை பிடித்தது. அதிலும் அதிக ஓட்டுகள் கிடைத்தது. இடது கம்யூனிஸ்ட் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா மேலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா அதிக இடங்களில் வெற்றிபெற்றது என்றும் வெங்கையாநாயுடு கூறினார்.

நம்பிக்கை:-

ஆட்சிமன்ற கூட்டத்தில் நலத்திட்டங்கள் செயல்படுத்துவது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி கொள்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும். வருகின்ற 2019-ம் ஆண்டும் பிரதமராக மோடி நீடிக்க மக்கள் விரும்புகிறார்கள். ஏழைகளின் நலன்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மோடி அரசு மீது நாடு முழுவதும் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து வருகிறார்கள். திட்டங்களின் பயன்கள் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சேரும்படி அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிக்கு தலைமையோ, கொள்கையோ இல்லை என்றும் வெங்கையா நாயுடு குற்றஞ்சாட்டினார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்: