கர்நாடக பா.ஜ.வில் உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்துவிட்டது: எடியூரப்பா

வியாழக்கிழமை, 11 மே 2017      அரசியல்
Yeddyurappa 2017 2 14

பெங்களூர் - கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியில் உட்கட்சி பூசலுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.  கர்நாடக மாநில தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இருக்கிறார். இவருக்கும் கட்சியின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவுக்கும் மோதல்போக்கு இருந்துவந்தது. கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில் எடியூரப்பா ஏதேச்சதிகாரமாக நடந்துகொள்கிறார் என்று ஈஸ்வரப்பா குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த மோதல் போக்கு நீடித்தால் வரும் 2018-ம் ஆண்டு ஆரம்பத்தில்  நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவின் வெற்றியை பாதிக்கும் என்று கட்சி மேலிடம் கருதியது. இதனால் கட்சியின் அகில இந்திய தலைவர் அமீத்ஷா அவசரமாக பெங்களூர் வந்தார். இரு கோஷ்டிகளுக்கிடையே நிலவிய மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவந்தார் என்று தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று பெங்களூரில்  மாநில காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா மீது குற்றப்பத்திரிக்கையை வெளியிட்ட எடியூரப்பா, பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்குள் இருந்த பூசலுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. நாங்கள் ஒற்றுமையாக செயல்படுகிறோம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார். கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் குமார் உள்பட கட்சியின் தலைவர்கள் வரும் 18-ம் தேதி முதல் ஜூன் மாதம் இறுதிவாரம் வரை மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள். மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. மத்திய அரசு ஒதுக்கும் நிதியை சரியாக பயன்படுத்துவதில்லை.

அவர் தூங்குவது போல அவரது அரசும் செயல்படாமல் தூங்கிக்கொண்டியிருக்கிறது. விவசாய கடன்களை ரத்து செய்வோம் என்று காங்கிரஸ் அரசு உறுதி அளித்தது. ஆனால் அந்த உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகள் வறுமையால் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்றும் எடியூரப்பா கூறினார். உட்கட்சி பூசலுக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது என்றும் கூறும் நீங்கள் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பா கலந்துகொள்ளவில்லையே என்று நிருபர்கள் கேட்டதற்கு, கடந்த 3 ஆண்டுகளாக சித்தராமையா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அவைகளில் ஈஸ்வரப்பா கலந்துகொள்ளவில்லை. அதேமாதிரி இந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை என்று பதில் அளித்தார். குற்றப்பத்திரிக்கையை சட்டமன்ற பா.ஜ. எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர்தான் தயாரித்து வருகிறார் என்றும் எடியூரப்பா மேலும் கூறினார்.

 

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்: