கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களில் வண்டல் மண் எடுத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள்: அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

சனிக்கிழமை, 27 மே 2017      கடலூர்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் ஆயத்துறையில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), பேரூராட்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து நடத்தும் ஏரி மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண், மண் மற்றும் களிமண் போன்றவைகளை விவசாயம் மற்றும் பொதுபயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு கலெக்டர் டி.பி.ராஜேஷ், ., தலைமையில்  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  விண்ணப்பங்களை வழங்கி பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில்  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது,

 தூர்வாரும் பணி

அம்மா அவர்களின் நல்லாசியுடன்  தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அரசாணை எண்.50 தொழில்துறை நாள்.27.04.2017ன்படி விவசாயிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண், மண் மற்றும் களிமண் ஆகியவற்றினை தூர்வாரி இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் பெருமாள் ஏரியில் தூர்வாரும் பணி 34,671 கன மீட்டர் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

6503 ஏக்கர் பயன்பெறும்

இதுவரை 1449 கன மீட்டர் வண்டல் மண் தூர்வாரப்பட்டு; பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயத்திற்கு இருபோகம் பயிரிடுவதற்கு 6503 ஏக்கர் பாசனத்திற்கு குறைபாடின்றி நீர் கிடைக்கப்பெறும். இத்திட்டத்தினால் குறிஞ்சிப்பாடி வட்டத்திலுள்ள பூண்டியான்குப்பம், அகரம், பள்ளிநீர் ஓடை, ஆலப்பாக்கம், பூவாணிக்குப்பம், ஆதிநாராயணபுரம், தானூர், தீர்த்தனகிரி, சிறுபாளையூர், கள்ளையாண்குப்பம், குண்டியமல்லூர், காயல்பட்டு போன்ற கிராமங்கள் பாசன வசதி முழுமையாக பெறும். வண்டல் மண், மண் மற்றும் களிமண்ணை விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலங்களுக்கு அதிகபட்சமாக 1 ஏக்கருக்கு 75 கன மீட்டரும். (25 டிராக்டர் லோடு), புஞ்சை நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 90 கனமீட்டரும் (30 டிராக்டல் லோடு), வீட்டு பயன்பாட்டிற்கு 30 கன மீட்டரும் (10 டிராக்டர் லோடு)க்கு மிகாமலும், மண்பாண்ட தொழிலுக்கு 60 கன மீட்டர் (20 டிராக்டர் லோடு)க்கு மிகாமலும் எடுத்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின் கீழ் தூர்வார பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்திலோ, கிராம நிர்வாக அலுவலகத்திலோ, பொதுப்பணித்துறை சிறப்பு முகாம்களிலோ அல்லது இந்நிகழ்ச்சியில் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து ஏரி அமைந்துள்ள சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று வேளாண்மைத்துறை அலுவலர்களிடம் அளித்து வண்டல் மண், மண் மற்றும் களிமண்ணை இலவசமாக எடுத்துச்செல்லலாம். எனவே, கடலூர் மாவட்டத்தில் உள்ள 535 ஏரிகளில் 18.6 இலட்சம் கன மீட்டர் அளவிற்கு வண்டல் மண் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

அமைச்சர் வாழ்த்து

இந்த சிறப்பான திட்டத்தினை விவசாயிகளும், பொதுமக்களும், மண்பாண்ட தொழிலாளர்களும் நன்கு தெரிந்துகொள்ளும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் போதுமான அளவிற்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். அதன்பேரில் நீங்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் நன்கு பயன்பெற்று விவசாய நிலங்களின் மகசூலை அதிகரிப்பதோடு வாழ்வாதாரத்தை உயர்த்தி பொருளாதா முன்னேற்றமடைந்து வாழ்வாங்கு வாழவேண்டும் என வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,தலைமையுரையில் தெரிவித்ததாவது,

பயனடைந்த 2723 விவசாயிகள்

தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அரசாணை எண்.50 தொழில்துறை நாள்.27.04.2017ன்படி விவசாயிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண், மண் மற்றும் களிமண் ஆகியவற்றி தூர்வாரி இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள 535 ஏரிகளில் 18.6 இலட்சம் கன மீட்டர் அளவிற்கு வண்டல் மண் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதுவரை 2723 விவசாயிகள், 99,328 கன மீட்டர் வண்டல் மண் எடுத்துச் சென்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் எளியமுறையில் பயன்பெறும் வகையில் இலவசமாக வண்டல் மண், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் நன்கு பயன்பெற்று விவசாய நிலங்களின் மகசூலை அதிகரிப்பதோடு வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் ஏரிகளில் வண்டல் மண், மண் மற்றும் களிமண் இலவசமாக எடுத்துச்செல்வதற்குரிய விண்ணப்பத்தினை  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் விவசாயிகளுக்கு வழங்கி, பணிகள் மேற்கொள்வதற்கான பர்மிட்டினை வழங்கினார்.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் பெருமாள் ஏரி விவசாய சங்க துணைச் செயலாளர் ஜி.பாலதண்டாயுதம் வரவேற்று பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்தராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் எஸ்.அருணகிரி, பார்த்திபன், எஸ்.சண்முகம், பாஸ்கர். சிவசங்கரன், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர்  ஜான்சிரானி, விவசாய சங்கத்தலைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் எஸ்.அருணகிரி நன்றியுரையாற்றினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து