முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் எதிர்பார்ப்பது போல எதுவும் கிடைக்காது: முதல்வர் எடப்பாடி பதிலடி

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விவகாரத்தில் மு.க.  ஸ்டாலின் எதிர்பார்ப்பது போல எதுவும்  கிடைக்காது என்றும், 4 ஆண்டுகளை பூர்த்தி செய்வோம் என்றும் நேற்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பதிலடி அளித்தார்.

தி.மு.க. வெளிநடப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்த பிரச்சனையை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் நேற்று முன்வைத்தார். அதை தகவல்கோரல் அடிப்படையில் எடுத்து கொள்வதாக சபாநாயகர் தனபால், அறிவித்தார். ஆனால் ஸ்டாலின் விரிவாக பேச அனுமதி கேட்டார். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து சபையில் பெரும் கூச்சல் குழப்பம் எழுப்பியபடி தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

வழக்கு விசாரணையில் ....

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் வருமாறு:-

எம்.பி.வைரக்கண்ணன் என்ற வழக்கறிஞர், இந்திய தேர்தல் ஆணையத்திடம்தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005-ன் கீழ், தன்னுடைய மனுவில், ஆர்.கே.நகரில்நடைபெற்ற இடைத்தேர்தல் சம்பவம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை கேட்டுள்ளார். அதைப்பற்றித் தான் இங்கே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் ராமசாமியும் பிரச்சனையை எழுப்பியிருக்கின்றார்கள். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில், வருமான வரித்துறை சோதனையின்போது, ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற பொழுது, சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அதிகாரியே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட ஏதுவாக புகார் மனு அளித்திட அறிவித்திருந்தது. அதன் தொடர்பாக, பெருநகர் குற்றவியல் நடுவரிடம் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது என்பதை தங்கள் வாயிலாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும், காங்கிரஸ் கட்சித்தலைவர் ராமசாமிக்கும் அவையில் இருக்கின்றவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க மீது 48 வழக்குகள்

அண்மையில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் இடைத்தேர்தலின் போது, தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தி.மு.க மீது 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12 வழக்குகள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நான் பதில்சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) பேட்டி கொடுத்ததாக சொல்லியிருக்கிறார்கள். ஆக, அதைப்பற்றி நான் கேட்டு இப்பொழுது பதில் அளித்திருக்கிறேன், அந்த விவரத்தைத் தான் கொடுத்திருக்கின்றேனே யொழிய, நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) பதில் வரவில்லை, இன்றைக்கு (நேற்று) பதில் வந்திருக்கிறது. இந்த பதிலை அவர்களுக்கு வழங்கியிருக்கின்றேன் என்பதை தாங்கள் வாயிலாக அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

4 ஆண்டு காலம் ....

இவர்கள் தினந்தோறும் சட்டமன்றத்திற்கு வருவதும், ஏதாவது ஒரு பிரச்சினையை எழுப்புவதும், அதில் ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார்கள். நிச்சயமாக எதுவுமே கிடைக்காது. அம்மாவினுடைய அரசு 4 ஆண்டு காலம் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக இருக்கும் என்பதை தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து