ஜவுளித்தொழிலை காப்பாற்ற வரிவிலக்கு கோரி ஜி.எஸ்.டி கவுன்சிலில் வலியுறுத்தப்படும் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2017      தமிழகம்
os-manian 2017 6 29

Source: provided

சென்னை : ஜவுளித்தொழிலை காப்பாற்ற வரி விலக்கு கேட்டு டெல்லியில் வலியுறுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் நேற்று நேரமில்லா நேரத்தின் போது அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.  அப்போது அவர் பேசுகையில்., சரக்கு மற்றும் சேவை வரியால் ஜவுளித்தொழில் முற்றிலும் பாதிக்கும் நிலையில் உள்ளது. அதில் காட்டனுக்கு 5 சதவீதம், பாலிஸ்டருக்கு 15 சதவீதம், டையிங் 5 சதவீதம், டிச்சிங் 18 சதவீதம் என பல்வேறு நிலையில் வரி விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜவுளி தொழிலை சார்ந்துள்ள கரூர், ஈரோடு, சேலம், குமாரபாளையம், பவானி உள்ளிட்ட பகுதிகளில் சேவை வரியினால் ஜவுளி தொழிலாளர்கள் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே சாதாரண மக்களையும், அடித்தட்டு மக்களையும், ஜவுளி தொழில்களையும் பாதிக்காமல் ஜவுளி தொழிலுக்கு வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு, மத்திய அரசுடன் பேசி, இந்த ஜவுளி தொழிலை தமிழகத்தில் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தி.மு.க சார்பில் தங்கம் தென்னரசு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணியும், ஜி.எஸ்.டி.யில் இருந்து ஜவுளித்துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


அதனைத் தொடர்ந்து பதிலளித்து பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கைத்தறி, விசைத்தறி ஒரே இடத்தில் முடியும் தொழில் அல்ல. விவசாயிகள் பருத்தியை உற்பத்தி செய்து அதனை நூலக மாற்றி 9 நிலைகளில் உள்ளன. மூலப்பொருளான பருத்தியில் இருந்து துணியாக தயாரிக்கும் வரை ஒவ்வொரு நிலையிலும் ஜி.எஸ்.டி. வரி இருக்கிறது.

இது குறித்து 10.7.2017 அன்று பல்வேறு சங்கங்கள் ஜவுளி மீதான ஜி.எஸ்.டி.வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என விசைத்தறி பெடரேஷன் உள்ளிட்டவர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு உரிய அழுத்தம் கொடுக்கும் வகையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், நெசவாளர்கள் பிரச்சனைகள் குறித்து தமிழக அரசு தரப்பில் விவாதிக்கபடும்.

இது தொடர்பாக, முதல்வர் ஏற்கனவே நிதியமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் நடப்பு கூட்டத்தொடர் முடிந்த பின்னர் நேரடியாக டெல்லி சென்று மத்திய அரசிடம் இந்த விவகாரம் தொடர்பாக உரிய அழுத்தம் கொடுக்கபட்டு, நெசவாளர்களுடைய பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து