குஜராத்தில் காங்கிரஸ் கட்சி உடைந்தது: முன்னாள் முதல்வர் வகேலா வெளியேறினார்

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      அரசியல்
shankersinh-vaghela 2017 07 21

காந்திநகர், குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. குஜராத் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலா காங்கிரஸைவிட்டு தமது ஆதரவாளர்களுடன் விலகி விட்டார்.

குஜராத் பாஜகவின் முகமாக இருந்தவர் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா. பாஜகவில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா கட்சியைத் தொடங்கினார்.பின்னர் காங்கிரஸில் அந்த கட்சியை அப்படியே இணைத்துவிட்டார். குஜராத் மூத்த காங்கிரஸ் தலைவரான வகேலா, அம்மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார்.

முதல்வர் வேட்பாளர்

குஜராத் சட்டசபைக்கு சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தம்மை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என மேலிடத்தில் வலியுறுத்தினார் வகேலா. ஆனால் டெல்லி மேலிடம் இதை நிராகரித்தது. இதனால் தற்போது டெல்லி மேலிடத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் வகேலா. அவருக்கு ஆதரவாக 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 11 எம்.எல்.ஏக்களும் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்தனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் மேலிடம் நேற்று நடைபெற்ற வகேலாவின் 77-வது பிறந்த நாள் விழாவில் யாரும் பங்கேற்க கூடாது என உத்தரவிட்டது.

காங்கிரஸில் இருந்து விலகல்

காந்தி நகரில் நேற்று நடைபெற்ற பிறந்த நாள் விழாவின் போது இதை சுட்டிக்காட்டிய வகேலா, காங்கிரஸ் என்னை 24 மணிநேரத்துக்கு முன்பே நீக்கிவிட்டது; அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்க இருக்கிறேன் என அதிரடியாக கூறினார். அத்துடன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை நீக்கிவிட்டு குஜராத் முன்னாள் முதல்வர் என பெயரிட்டுள்ளார். வகேலா தனிக்கட்சி தொடங்குவாரா? அல்லது தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைவாரா என்பது விரைவில் தெரியவரும். தனிக்கட்சி தொடங்கி பாஜகவுடன் வகேலா கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து