எம்.எல்.ஏ.க்களை கடத்த அவர்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல: அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2017      அரசியல்
jayakumar(N)

சென்னை,  தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சிக்கு எதிராகச் சதி மற்றும் துரோகம் செய்பவர்கள் எட்டப்பர்கள் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் எம்.எல்.ஏ.க்களை கடத்த அவர்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல என்றும் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு நேற்று அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டில்தான் சட்டசபை தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கு முன்பாக ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவது என்பது சரியானதல்ல. ஒரு முறை தேர்தல் நடத்த குறைந்தது 1000 கோடி செலவாகும்.

தமிழகத்தில் நடந்து வரும் ஜெயலலிதாவின் அரசுக்கு எதிராகச் சதி, துரோகம் செய்பவர்கள் எட்டப்பர்கள். ஜெயலலிதாவின் கனவை சிதைப்பவர்கள் எட்டப்பர்கள். கட்சிக்குள் பிரச்சனை என்பது அண்ணன் தம்பிகளுக்குள் நடக்கிறது

இந்த அண்ணன் தம்பி சச்சரவில் ஆதாயம் தேடலாம் எனக் கனவு காண்கிறார் ஸ்டாலின். இதனைப் பயன்படுத்திக் கொண்டு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் துடிக்கிறார். அவரது எண்ணம் மக்களுக்கு விரோதமானது- அதனை மக்கள் நிராகரிப்பார்கள்.

குழந்தைகள் அல்ல

மதுரை மேலூரில் நடைபெற்ற தினகரனின் கூட்டத்திற்கு செல்லக் கூடாது என்று எந்த எம்.எல்.ஏ.வையும் கடத்தி வைக்கவில்லை. அவர்களது இயலாமையால் எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டதாகப் புகார் கூறுகின்றனர். எம்எல்ஏக்களை கடத்த அவர்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல.

விரைவில் இணையும்

அதே போன்று தொகுதிக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடிப்பு என்பது பொய்யான புகார். எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க அணிகள் இணைப்பு என்பது செயல்வடிவம் பெற்றுள்ளது. விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து