கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயும் தடுப்பு முறைகளும்

புதன்கிழமை, 1 நவம்பர் 2017      வேளாண் பூமி
komari

Source: provided

கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான விவசாயிகள் கால்நடைகளேயே முழுமையாக நம்பி உள்ளனர். இந்நிலையில், பருவ மழை மாற்றங்களினால் ஏற்படும் தீவன தட்டுப்பாட்டோடு நோய் பரவலையும் வேதனையுடன் சந்தித்து வருகின்றனர். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களினால் உற்பத்தி திறன் வெகுவாக குறைவதோடு சில சமயம் கால்நடைகளேயே இழக்கவும் நேரிடுகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களில் கோமாரி நோயின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

கோமாரி நோய் கால்க்காணை வாய்க்காணை என்றும், கால்சப்பை வாய்சப்பை என்றும் வேறு சில பெயர்களால் அழைக்கபடுவதுண்டு. இந்நோய் “பிக்கார்னா வைரஸ்” என்னும் நச்சுயிரியால் உண்டாகிறது. இந்நோய்க் கிருமியில் 7 வகைகள் உள்ளன. அவற்றுள்; நம்நாட்டில் 4 வகைகளும், 60 க்கும் மேற்பட்ட உட்பிரிவு வகைகளும் உண்டு. ஒவ்வொன்றும் நோய் ஏற்படுத்தும் விதத்தில் வேறுபட்டவை. மேலும்,இந்நச்சுயிர் கிருமி மாறிவரும் தட்ப வெப்ப நிலையை தாங்கி அதிக நாட்கள் உயிருடன் வாழும் குணமுடையது.

நோய் பரவல் மற்றும் அறிகுறிகள்  :  மாடுகள், எருமைகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் போன்ற கால்நடைகள் இந்நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இந்நோய்க் கிருமி நோயுற்ற கால்நடைகளிலிருந்து மற்றொன்றிற்கு அதே இனத்திலிருந்தோ அல்லது வேறு இனத்திலிருந்தோ நேரடியாகவும் அல்லது இக்கிருமி கலந்த தண்ணீர், உணவு மற்றும் உபகரணங்கள் மூலமாகவும் அல்லது காற்றின் மூலமாகவும் பரவக்கூடியது.

நோய் கண்ட மாடுகள் குணமான பிறகு இக்கிருமிகளை ஒரு வருடத்திற்கு மேலாக தமக்குள் தக்கவைத்து கிருமிகளை வெளிப்படுத்தும். அதேபோல் ஆடுகள் ஆறு மாதத்திற்கும், பன்றிகள் ஒரு மாதத்திற்கும் கிருமிகளை தக்கவைத்து வெளிப்படுத்தும்.

இந்நோய் கண்ட மாடுகள் கீழ்கண்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும்: அதிக காய்ச்சலுடன் சோர்வுற்று, சரிவர தீவனம் எடுக்காமல் இருக்கும் உதடுகளின் உட்புறம்,ஈறுகள், மேல்தாடை, நாக்கு, கன்னங்களின் உட்புறம் ஆகிய இடங்களில் கொப்புளங்கள் ஏற்பட்டு பின்பு உடைந்து புண்கள் உண்டாகும்.

வாயிலிருந்து சளி போன்ற நுரையுடன் கூடிய உமிழ்நீர் ஒழுகிக் கொண்டேயிருக்கும். அசை போடுவது போன்று வாயை அசைத்து ‘சப்’‘சப்’ என்ற சத்தம் எழுப்பும். கால்களில் வீக்கம் ஏற்பட்டு, சூடு அதிகமாகி, குளம்புகளுக்கிடையேயும்,குளம்பிற்கு மேலுள்ள தோலிலும் கொப்புளங்கள் தோன்றுகின்றன. பாதிக்கப்பட்ட கால்நடைகள் நொண்டும்.பின்பு கொப்புளங்கள் உடைந்து புண்கள் உண்டாகும். புண்களில் ஈக்கள் உட்கார்வதன் மூலம் புழுக்கள் வைக்கலாம்.

மாடுகளில் மடியிலும், காம்புகளிலும்கொப்புளங்கள் தோன்றும். இதனால் பால்  குறைவதுடன் மடிவீக்கமும் ஏற்படும். இந்நோய் கண்ட கறவை மாடுகளிலிருந்து பாலினைக் குடிக்கும் கன்றுகள் தீவிர இதய தசை அழற்சியினால் இறந்துவிடும். நோயுற்ற பசுக்களில் சினை பிடிப்பது சிரமமாக இருக்கும். சினை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படும்.

இந்நோய் மாடுகளில் அதிகம் உயிர்ச்சேதம் ஏற்படுத்தாவிட்டாலும், உற்பத்தி திறன் மற்றும் உழைக்கும் சக்தியைக் குறைத்து விடுவதால் அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும்.நோயுற்றகால்நடைகளில் நாளமில்லா சுரப்பிகளில் மாற்றம் ஏற்படுவதால் தோல் உலர்ந்து சொறசொறப்பாகவும், உரோமங்கள் உதிர்வும் காணப்படும்.

தடுப்பு முறைகள்  :  கோமாரி நோய் வராமல் தடுக்க கன்றுகளுக்கு 8 வார வயதில் முதல் தடுப்பூசியும், 12 வார வயதில் இரண்டாவது தடுப்பூசியும், 16 வார வயதில் மூன்றாவது தடுப்பூசியும் போட வேண்டும். பிறகு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும். நோய் கிளர்ச்சி காணும் இடங்களில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை என வருடத்திற்கு மூன்று முறைதடுப்பூசி போட வேண்டும். பொதுவாக மழைக்காலத்திற்கு முன்பும் கோடைக் காலத்திற்கு முன்பும் தடுப்பூசி போட வேண்டும்.

நல்ல ஆரோக்கியமான கால்நடைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டும். நோய் கண்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போட கூடாது. முதிர்ந்த சினையுடனும், கன்று ஈனும் தறுவாயில் உள்ள கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடலாம். கால்நடைகள் பராமரிக்கும் கொட்டகைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

நோய் கண்ட கால்நடைகள் பராமரிப்பு :  நோயுற்ற கால்நடைகளை மற்ற ஆரோக்கியமான கால்நடைகளிலிருந்து பிரித்து சுத்தமான பகுதிகளில் வைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

வாய் மற்றும் கால் புண்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் அல்லது படிகார கரைசலைக் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும். போரிக்ஆசிட் பவுடர் மற்றும் கிளிசரின் கலவையை வாய் புண்களில் தடவலாம். நாக்குப் புண் இருப்பதால் சரியாக சாப்பிட இயலாத கால்நடைகளுக்கு கம்பு அல்லது கேழ்வரகு கஞ்சியில் குளுக்கோஸ் பவுடர் கலந்து கொடுக்கலாம்.

கால் குளம்புகளில் உள்ள புண்களில் சில சமயம் ஈக்கள் மூலம் புழுக்கள் வைக்கலாம். புண்களில் டர்பென்டைன் ஆயில் இடுவதன் மூலம் புழுக்களை இறக்கச் செய்து வெளியே எடுத்து விடலாம் பிறகு புண்கள் ஆறுவதற்கு ஆன்டிசெப்டிக் பவுடரும்,ஈக்கள் உட்காராமல் தடுக்க வேப்பெண்ணையோ அல்லது ஆயின்மென்டோ தடவ வேண்டும். கால்நடை மருத்துவரின் உதவியுடன் முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

கோமாரி நோய் கண்ட மாடுகளின் பாலை கன்றுகளுக்கு ஊட்ட விடக்கூடாது. பாலைக் காய்ச்சிய பின்னரே கொடுக்க வேண்டும். நோயுற்ற கால்நடைகளை பராமரிக்கும் இடங்களில், இடத்தை சுத்தம் செய்து கிருமி நாசினி மருந்தை தெளிக்க வேண்டும். நோயுற்ற மாடுகளுக்கு பசுந்தீவனம் மற்றும் உலர்ந்த தீவனம் அளிக்கும் போது மீதமாகும் தீவனத்தை மற்ற மாடுகளுக்கு அளிக்க கூடாது. அவற்றினை எரித்து விட வேண்டும்.

நோயுற்ற கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. நோய் கிளர்ச்சியுற்ற காலங்களில் கால்நடைகளை சந்தைகளில் வாங்குவதையோ, விற்பதையோ தவிர்க்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வருடத்திற்கு இரண்டு முறை அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தடுப்புசி போடப்பட்டு வருகிறது. அனைத்து கால்நடைப் பண்ணையாளர்களும் தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகவும்.

நோய் வந்தபின் கால்நடைகளின் உற்பத்தி குறைவு, மலட்டுத்தன்மை மற்றும் இறப்பு போன்றவற்றால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்கும் பொருட்டு காலத்தே தடுப்பூசி போடுவோம், நோய் வருமுன் காத்து வளமோடு வாழ்வோம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் அல்லது கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களைத் தொடர்புக் கொண்டு விவரங்கள் அறியலாம்.

தொடர்புக்கு - கால்நடை மருத்துவத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614 625.

தொகுப்பு - மரு.மு.வீரசெல்வம், மரு.கோ.ஜெயலட்சுமி, மரு.சோ.யோN கஷ்பிரியா, மரு.மா.வெங்கடேசன், மரு.ம.சிவகுமார், மரு.ப.செல்வராஜ்

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து