சிவகங்கை மாவட்ட கால்துறை சார்பாக நடமாடும் ஆலோசனை கூட்டம்

6 siva news 1

சிவகங்கை - போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பெண்கள் நேரில் வந்து புகார் கொடுக்க தயங்குவதால், குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என சிவகங்கை எஸ்.பி., ஜெயச்சந்திரனுக்கு புகார் சென்றன.
இதையடுத்து, குற்றங்கள் அடிக்கடி நடக்கும் பகுதியில் மகளிர் போலீசார் மூலம் நேரில் சென்று புகார்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு எஸ்.பி., அறிவுறுத்தி இருந்தார்.
இதன்படி சிவகங்கை நெல்மண்டி தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 'நடமாடும் ஆலோசனை' முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தலைமை வகித்து பேசினார். அரசு மருத்துவமனை டாக்டர் சூரியநாராயணன், அரசு வழக்கறிஞர் குருதாஸ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வேணுகோபால் பேசினர்.
இன்ஸ்பெக்டர் மோகன் பேசியதாவது: வயதான பெற்றோரை இன்று கவனிக்காமல் விட்டால், நாளை உங்கள் குழந்தைகள் உங்களுக்கு அதை தான் செய்வார்கள். சமீப காலமாக இதுபோன்ற புகார்கள் தான் போலீசுக்கு அதிகம் வருகின்றன. பெண்கள் தயக்கமின்றி போலீசில் புகார்களை கொடுக்க முன்வர வேண்டும். சிறார்கள் குற்றங்களில் ஈடுபடுகிறார்களா என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். குற்றம் நடப்பது தெரியவந்தால் உடனடியாக அவசர போலீஸ் உதவி எண் 100 க்கு போன் செய்ய வேண்டும்.
வீடுகளின் சுவர்களில் வட்டம், முக்கோணம், சதுரம், பெருக்கல் குறி, வட்டத்திற்குள் புள்ளி போன்ற குறியீடுகள் இருந்தால் உடனே அதை அழித்து விடுங்கள். திருடர்கள் இரவில் திருடுவதற்கு பகலில் நோட்டம் பார்த்து இத்தகைய குறியீடுகளை குறிக்கின்றனர். தெருக்களில் நகை பாலீஷ் போடுவதாக வருவோர் வீடுகளில் புகுந்து திருடுவதற்கு துணை போவது தெரியவந்துள்ளது.
இரவில் பின்பக்க கதவுகள், தலைவாசல் கதவுகளை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து விட்டு படுக்க செல்லுங்கள். ஆண்கள் வெளியே செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்லும்படி பெண்கள் எடுத்துக்கூற வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் தங்களது புகார்களை தயக்கமின்றி கூறலாம் என போலீசார் அறிவித்ததும், பல பெண்கள் முன்வந்து பேசினர்.
அவர்கள் பேசியதாவது:உஷா,சோமநாதபுரம் கோயில் தெரு: எங்கள் தெருவில் பல தகாத செயல் நடக்கிறது. தினமும் காலை7:00 மணிக்கு டியூசன் படிக்க செல்லும் ஒரு மாணவியை ஒரு பையன் பின்தொடர்ந்து செல்கிறான். பகல் 1:00 மணிக்கு குடிகாரர்கள் தள்ளாடியபடி நடப்பதால் தெருவில் பெண்கள் நடக்க முடியவில்லை. கஞ்சா விற்பதும் அந்த தெருவில் தான் நடக்கிறது.
சுதா, தியாகி சேதுராமச்சந்திரன் தெரு: வீட்டு முன் காரை நிறுத்தினால் கண்ணாடியை உடைத்து விடுகிறார்கள். டூவீலர்களை நிறுத்தி வைத்தால் இரவில் பெட்ரோல் திருடுகிறார்கள். டூவீலர்களில் வேகமாக செல்கின்றனர். குழந்தைகள் நடமாடுகின்றன. ஏன் வேகமாக செல்கிறீர்கள் என கேட்டால் ஆபாசமாக பேசுவதுடன், உன் பிள்ளையை வீட்டிற்குள் வைத்துக்கொள், தெருவில் ஏன் விடுகிறாய் என்று கேட்கிறார்கள்.இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதற்கு பதிலளித்து இன்ஸ்பெக்டர் மோகன் பேசுகையில், ''தவறு செய்பவர்கள் குறித்து 100 ம் நம்பருக்கு போன் செய்து தகவல் தெரிவியுங்கள். போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்,'' என்றார்.நிகழ்ச்சியில் எஸ்.ஐ.,க்கள் மகேஸ்வரி, தமிழ்செல்வி பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், சண்முகராஜன், ராஜபாண்டி, ஜெயக்குமார் செய்திருந்தனர

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து