சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் - முதல்வர் எடப்பாடி பேட்டி

சனிக்கிழமை, 11 நவம்பர் 2017      தமிழகம்
cm edapadi interview 2017 11 11

சென்னை : சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிரந்தரத் தீர்வு காண டிசம்பர் மாதத்திற்கு பின்னர் அரசு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், ஜெயகுமார், விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், கலெக்டர்கள் சுந்தரவள்ளி (திருவள்ளூர்) அன்புச்செல்வன், (சென்னை) பொன்னையா ( காஞ்சிபுரம் ) ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்பொழுது ஏற்பட்ட அல்ல

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி: இப்பொழுதும் நிறைய இடங்களில் குடியிருப்புப் பகுதிகளை நீர் சூழ்ந்திருக்கிறது. அதற்கு ஆக்கிரமிப்புதான் காரணம் என்கின்றார்கள். அதனை அகற்ற என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது?
பதில்: இது தற்பொழுது ஏற்பட்ட ஆக்கிரமிப்பு அல்ல, உங்களுக்கே நன்றாகத் தெரியும். இவை குடியிருப்புப் பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள், இப்பொழுது கட்டப்பட்ட வீடுகள் அல்ல. இன்றைக்கு சென்னை மாநகரைப் பொறுத்தவரை, 25 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு அனைத்தும் கட்டிடங்கள் நிறைந்த பகுதி. அதிக மழை பொழிகின்றபொழுது, சாலைகளின் வழியாகத்தான் மழைநீர் வெளியேற முடியும். 4 செ.மீ. பொழியும் மழையின் அளவிற்குத்தான் வசதி இருக்கின்றது. எல்லா நகரங்களிலுமே, தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகளவில் எடுத்துக்கொண்டாலும், நகரப் பகுதிகளில் நீர் அன்றாடம் வெளியேறுவதற்குண்டான கால்வாய்தான் அமைத்திருக்கின்றார்கள்.

386 கி.மீ வடிகால் வசதி

கனமழை பொழிகின்றபொழுது, அதிகமானமழைநீர் வருகின்றபொழுது, அனைத்தும் கட்டிடங்களாக இருக்கின்ற காரணத்தினால் அந்த மழைநீர் சாலை வழியாகத்தான் செல்கின்றது. அதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குகின்றது. அதுதான் காரணம். அப்படியிருந்தாலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2015-ஆம் ஆண்டில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டுமென்பதற்காக, சட்டமன்றத்தில், சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் ரூ.4,034 கோடி வெள்ளநீர் வடிகால் வசதி செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக ரூ.1,101 கோடி நிதிஉதவி செய்து 386 கி.மீ.க்கு வடிகால் வசதி செய்து கொடுப்பதற்காக திட்டம் தீட்டப்பட்டு, 300 கி.மீ. இன்றைக்கு நிறைவடைந்திருக்கின்றது.எஞ்சிய 86 கி.மீ. பணிதுவங்கவிருக்கின்றது.

ரூ.1,887கோடி மதிப்பில்...

அதேபோல, கொசஸ்தலை ஆற்று வடிநிலப் பகுதியில் ரூ.1,887கோடி மதிப்பீட்டில் உதவியுடன் வடிகால் வசதியை நிரந்தரமாக செய்துகொடுப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதேபோல கோவளம் வடிநிலப்பகுதிக்கு ரூ.1,234 கோடி மதிப்பீட்டில் முகறு என்ற நிறுவனத்தின் மூலமாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகின்றது. ஆகவே, பருவமழை அதிகமாக பொழிகின்ற காலங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்குகின்ற மழைநீரை வடிகால் வசதியுடன் வெளியேற்றுவதற்காக அந்தப் பணிகள் படிப்படியாக செயலாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

விரைவில் பணி முடியும்

கேள்வி: சென்னையிலுள்ள குடிநீர் தேவையைப் போக்குவதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கின்றதே?

பதில்: அதில் 1 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்க முடியும். காலதாமதம் ஏற்படுவதற்கு காரணம், நாம் அணை கட்டுகின்ற பகுதிகளில் உள்ள நில உரிமையாளர்கள் நிலத்தை அரசிடம் ஒப்படைக்க மறுக்கின்றார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி, அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தப் பணி விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்னும் 4, 5 மாதங்களில் பணி நிறைவடைந்துவிடும்.

அரசு தீவிர நடவடிக்கை

கேள்வி: கடந்த முறையின் பொழுது மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளிலேயே, இந்த முறையும் தேங்கியுள்ளது. அதற்கான காரணங்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதா? நிரந்தரத் தீர்வு காண ஏதேனும் முக்கிய முடிவுகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதா?

பதில்: நிரந்தரத் தீர்வு காண்பதற்காகத்தான், நான் விளக்கமாக கூறியிருக்கின்றேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வெள்ளநீர் வடிகால் வசதி செய்வதற்காக ரூ 4,034 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்ட பணி தொடங்கப்பட்டு, இன்னும் இரண்டு கட்டப்பணிகள் துவங்கவிருக்கின்றது. அதுமட்டுமல்ல, தாழ்வான பகுதிகளில் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வீடுகள், அதற்கு வழிகண்டு அவற்றை அகற்றிக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கு அமைச்சர்கள், அரசால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளும் அங்கேயே முகாமிட்டு, இரவு பகல் பாராமல், சென்னை மாநகராட்சி அதிகாரிகளோடு இணைந்து, தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை மின்மோட்டார் வைத்து உடனடியாக வெளியேற்றியதன் காரணத்தினால் இன்றையதினம் சென்னை மாநகரத்தில் எங்கேயும் நீர் இல்லாத அளவிற்கு அரசு எடுத்தநடவடிக்கையைக் காணமுடிகின்றது.

15 மண்டலங்களிலும்...

அரசைப் பொறுத்தவரை, துரித நடவடிக்கைகளை எடுத்துதான் வருகின்றது. வீடுகளை இடிக்காமல், இருக்கின்ற வழிகளை வைத்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தண்ணீர் அகற்றப்படவேண்டும் என்கின்ற சூழ்நிலையில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அரசு தக்க நடவடிக்கை எடுத்ததின் காரணமாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் இருக்கின்ற 15 மண்டலங்களிலும், தாழ்வான பகுதியில் இருக்கின்ற மழைநீர் வெளியேற்றப்பட்டிருக்கின்றது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் ஏரிகள் நிறைந்துள்ள பகுதி.

டிசம்பர் மாதத்திறக்கு பின்...

அந்த ஏரிகள் நிறைந்த பகுதிகளில், தாழ்வானபகுதிகளில் வீடுகள் கட்டியுள்ள காரணத்தினால் மழைநீர் வெளியேறாமல் இருக்கின்றது. அப்படிப்பட்ட அந்தப் பகுதிகளிலும் தேங்கியுள்ள நீரை நிரந்தரமாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளிடம் தகவல்கள் கேட்டிருக்கின்றோம். அவர்களும் அப்பணிகளை மேற்கொள்வார்கள். இந்தப் பருவமழை டிசம்பர் மாதம் வரை பொழியும், அதன்பிறகு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு அரசால் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Kaatrin Mozhi Review | Jyothika | Vidharth | Lakshmi Manchu | Radha Mohan

Vanaraja Chicken | How to Start Vanaraja Chicken farming | வனராஜா வகை நாட்டுக்கோழி வளர்ப்பு சுலபமா

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து