2018ல் தரவரிசையில் நம்பர் ஒன் ஆக இருக்க விருப்பம்: பி.வி.சிந்து

வெள்ளிக்கிழமை, 29 டிசம்பர் 2017      விளையாட்டு
PV Sindhu 2017 4 3

புதுடெல்லி: 2018-ம் ஆண்டு தரவரிசைப் பட்டியலில் நம்பர் ஒன் வீராங்கனையாக இருக்க விரும்புவதாக இந்திய பாட்மிண்டன் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

இந்திய பாட்மிண்டன் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து உலக தரவரிசையில் இந்த ஆண்டை 3-வது இடத்துடன் நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் அடுத்த சீசனில் நம்பர் ஒன் வீராங்கனையாக இருக்க விரும்புதவாக சிந்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
வரும் சீசனில் நம்பர் ஒன் வீராங்கனையாக இருக்க விரும்புகிறேன். தற்போது 3-வது இடத்தில் உள்ளேன். தரவரிசை என்பது ஒவ்வொரு தொடரில் எப்படி விளையாடுகிறோம் என்பதை சார்ந்தது. நீங்கள் சிறப்பாக விளையாடினால் தானாகவே தரவரிசையில் சிறந்த இடம் கிடைக்கும். அதனால் தரவரிசை குறித்து நான் அதிகம் யோசிப்பது இல்லை. நான் சிறப்பாக விளையாடினால் தானாகவே அந்த இடத்தில் இருப்பேன்.

இந்தியாவில் விளையாடும் போது சிறப்பானதாக உணர்வேன். ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு என்னை ஊக்கப்படுத்தும். சமீபத்தில் துபாயில் விளையாடிய போது ரசிகர்கள் அளித்த பேராதராவால் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எப்போதுமே எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால் நாங்கள் எங்களது ஆட்டத்தையே விளையாடுகிறோம். முடிந்த அளவுக்கு சிறந்த திறனை வெளிப்படுத்துகிறோம். எந்தவித நெருக்கடியையும் நான் உணரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


22 வயதான சிந்து, இந்த சீசனில் சையது மோடி கிராண்ட் பிரிக்ஸ், இந்தியா ஓபன், கொரியா ஓபன் தொடர்களில் பட்டம் வென்றுள்ளார். மேலும் உலக சாம்பியன்ஷிப், ஹாங்காங் ஓபன், துபை சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் தொடர்களில் 2-வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து