முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீட்டில் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பும் - சர்ச்சைகளும்

செவ்வாய்க்கிழமை, 2 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

அசாம்: அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் தொடர்கின்றன. இதனால், முழு பட்டியலும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என கருதப்படுகிறது.

அசாமில் 3.29 கோடி மக்கள் வசிக்கின்றனர். அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகள் குடியேறி விடுகின்றனர். இதனால் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், யார் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அசாம் மக்களோடு மக்களாக அவர்கள் கலந்து வசித்து வருவதால் அதிகாரிகளுக்கு அவர்களை இனம் பிரிப்பதில் சிக்கல் உள்ளது.

இதைத் தடுப்பதற்காக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் மாநில அரசு தயார் செய்து வருகிறது. இதற்காக அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களைச் சரிபார்த்தல், ஆவணங்களைச் உறுதி செய்தல் என பல முறைகளில் அசாம் மாநில அதிகாரிகள் இந்த பதிவேட்டைத் தயார் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முதன்முறையாக 1.9 கோடி பேர் அடங்கிய தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதல் வரைவு பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. ஆனால் இதுபற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், தலைவர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் விடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வங்கதேச இந்துக்கள்
அசாம் மாநில அரசு தயாரித்து வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியலில் வங்கதேசத்தை சேர்ந்த இந்துக்களின் பெயர்களை சேர்க்கும் முயற்சியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக அதன் கூட்டணிக் கட்சியான அசாம் கண பரிஷத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை கைவிடவில்லை எனில் கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

பாகிஸ்தானுடன், 1971-ம் ஆண்டு நடந்த போரைத் தொடர்ந்து, வங்கதேசம் உருவான போது, இந்தியாவிற்குள் நுழைந்த அகதிகள் தற்போது ஏராளமான அளவில் அசாமில் வசித்து வருவதாகவும், அவர்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கும் நடவடிக்கையை ஏற்க முடியாது எனவும் அசாம் கண பரிஷத் கூறியுள்ளது.

இதுபோலவே, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கும் பணி, மத அடிப்படையில் நடைபெறக்கூடாது என, காங்கிரஸ், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

29 லட்சம் பெண்கள்
அதுபோலவே, 29 லட்சம் பெண்கள் அசாமில் திருமணம் செய்து கொண்ட பின், அதற்கான ஆதாரங்களுடன், தங்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிராமப் பஞ்சாயத்து நிர்வாகத்தில் பதிவு செய்த இந்த ஆதாரங்களை ஏற்பதில் சிக்கல் உள்ளது. இதுபோன்ற ஆவணங்கள் ஏற்கத்தக்கதல்ல என கவுகாத்தி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இதனை ஆதாரமாக கொண்டு 29 லட்சம் பேரின் விண்ணப்பங்களை ஏற்பதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

மேலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இடம் பெறுவதற்கு, விண்ணப்பத்துடன் அளிக்கப்பட்ட ஆதாரங்கள், இரு நிலைகளில் சோதனை செய்யப்படுகிறது. கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள், சான்று அளித்து இருந்தால் அது, அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. மாறாக அந்த சான்றை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருந்தால் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இதுபோன்ற காரணங்களால், தேசிய குடிமக்கள் பதிவேடு முழுமையாக தயாரிக்கப்பட்டு வெளியிடும் பணி குறித்த காலத்தில் முடிவடைவதில் சிக்கல் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2018-ம் ஆண்டு இறுதிக்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மேலும் காலதாமதம் ஆகலாம் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து