முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா 4-வது முறை சாம்பியன் டிராவிட்டின் இளம்படை சாதனை

சனிக்கிழமை, 3 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மவுன்ட் மாங்கானு: நியூசிலாந்தில் நடந்த 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சாம்பியன் பட்டம் வென்று பயிற்சியாளர் டிராவிட்டின் இளம் படை சாதனை படைத்துள்ளது.

நியூசிலாந்தில் நடந்து வரும் 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்குட்பட்டோர்) இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் சாம்பியன் மகுடத்துக்கு முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின.

ஆஸ்திரேலியா பேட்டிங் ...
மவுன்ட் மாங்கானுவில் இந்திய நேரப்படி காலை 6:30 மணிக்குத் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணி 59 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் இஷான் பரோல் மற்றும் கமலேஷ் நகர்கோட்டி ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து, 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உப்பல் மற்றும் மெர்லோ ஜோடி ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து திணறல்...
இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 34 ரன்களுடன் உப்பல் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மெக்ஸ்வீனி 23 ரன்களில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் சிறப்பாக ஆடி மெர்லோ அரைசதம் அடித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 250 ரன்களைக் கடந்துவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், மெர்லோ 79 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய இந்திய அணி, 47.2 ஓவர்களில் 216 ரன்களில் ஆஸ்திரேலிய அணியை ஆட்டமிழக்கச் செய்தது. இதையடுத்து 217 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

217 ரன்கள் இலக்குடன்...
இந்திய அணிக்கு கேப்டன் பிரித்வி ஷா, மன்ஜோத் கல்ரா ஜோடி சிறப்பான தொடக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில், 29 ரன்களுடன் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அதிரடி வீரர் சுப்மன் கில், 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்தத் தொடரில் ஜொலித்த சுப்மன் கில், முதல்முறையாக 50 ரன்களுக்கு குறைவான ஸ்கோருடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

கல்ரா அசத்தல் சதம்...
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் கல்ரா, சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த வெற்றி இலக்கை இந்திய அணி, 38.5 ஓவர்களில் எட்டியது. கல்ரா 101 ரன்களுடனும், அவருக்கு ஒத்துழைப்புக் கொடுத்த ஹர்விக் தேசாய் 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

டிராவிட்டின் இளம்...
இந்தத் தொடரில், இந்திய அணி, பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைச் சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறது. முன்னதாக, லீக் சுற்றில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை தொடரில், டிராவிட்டின் பயிற்சியின் கீழ், இறுதிப் போட்டியில் இந்திய அணி,வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றிருந்தது. தவறுகளைச் சரிசெய்து, இந்த முறை டிராவிட்டின் இளம் படை கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

ஜூனியர்  உலகக்கோப்பையை 4-வது முறையாக வென்று இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து