32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்ளும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் இன்று தொடங்குகிறது - தொடக்க ஆட்டத்தில் ரஷ்யா - சவுதிஅரேபியா மோதல்

புதன்கிழமை, 13 ஜூன் 2018      விளையாட்டு
worldcup football 2018 6 13

மாஸ்கோ : ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

11 நகரங்களில்...

32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்ளும் முக்கிய விளையாட்டு திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்கி ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

மொத்தம் ரூ.87 ஆயிரம் கோடி செலவில் உலகக் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள், விளையாட்டு மைதான வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ரஷிய அரசு செய்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து 1 கோடி ரசிகர்கள இதற்காக பயணம் மேற்கொள்வர் என கணிக்கப்பட்டுள்ளது.

துவக்க விழா...

துவக்க விழா மாஸ்கோவின் லூசினிக்கி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 3 பிரபல கலைஞர்களான ராபி வில்லியம்ஸ், அய்டா கரிஃபுல்லினா, ரொனால்டோ ஆகியோர் பங்கேற்று இசைநிகழ்ச்சி நடத்துகின்றனர். மேலும் உள்ளூரைச் சேர்ந்த 500 கலைஞர்களும் தங்கள் திறமையை சுமார் 30 நிமிடங்கள் வெளிப்படுத்துகின்றனர். இதில் நடனக் கலைஞர்கள், ஜிம்னாஸ்டிக்ஸ், இசைக்கலைஞர்கள் இடம் பெற்றிருப்பர்.

முதல் போட்டி

பின்னர் போட்டியை நடத்தும் ரஷியா-சவுதி அரேபிய அணிகள் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன. நடப்புச் சாம்பியன் ஜெர்மனி 17-ஆம் தேதி மெக்ஸிகோவுடன் மோதும் ஆட்டம் மாஸ்கோவிலும், 5 முறை சாம்பியன் பிரேசில்-சுவிட்சர்லாந்துடன் மோதும் ஆட்டம் 18-ஆம் தேதி ரோஸ்டோவ் ஆன் டான் விளையாட்டரங்கிலும் நடக்கிறது, தொடக்க விழா சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.

80 ஆயிரம் ரசிகர்கள்...

உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞர் ராபி வில்லியம்ஸ், ரஷிய கலைஞர் அய்டா கரிஃபுல்லினா, பிரேசில் வீரர் ரொனால்டோ ஆகியோர் துவக்க விழாவில் பங்கேற்று நிகழ்ச்சியை வழங்குகின்றனர். இதுகுறித்து ராபி வில்லியம்ஸ் கூறுகையில்: உலகக் கோப்பை திருவிழாவுக்காக 80 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் இசைநிகழ்ச்சி நடத்துவது பெருமை தருகிறது. நான் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தாலும், பிஃபா உலகக் கோப்பை துவக்க விழாவில் பங்கேற்று நிகழ்ச்சி நடத்துவது என்பது சிறுவயது கனவு என்றார்.

பாதுகாப்பு தீவிரம்...

இதற்கிடையே உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு தீவிரபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டி நடைபெறும் மைதானங்கள் அருகே விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஜாமர் கருவிகள், வைக்கப்பட்டுள்ளன. மேலும் ரஷியாவுக்கு போட்டியைக் காண வரும் ரசிகர்கள் உள்ளூர் போலீஸாரிடம் தங்கள் பெயர்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஷியா-சவுதி அரேபியா தொடக்க ஆட்டத்துக்காக 30 ஆயிரம் போலீஸார் மாஸ்கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபடுவர். மேலும் சந்தேகப்படும்படி வரும் விமானத்தைக் கண்காணிக்க விமானப் படை விமானங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. உலகக் கோப்பை போட்டியை சிறப்பாக நடத்துவதின் மூலம் ரஷியா வல்லரசு நாடு என்பதை மீண்டும் உறுதி செய்ய அதிபர் புதின் திட்டமிட்டுள்ளார் எனக் கருதப்படுகிறது.

2022-ஆம் ஆண்டு...

வரும் 2026 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை யாருக்கு வழங்குவது என்பது குறித்த பிஃபா வாக்கெடுப்பு நேற்று மாஸ்கோவில் நடந்தது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கான வாய்ப்பு பிஃபா பொதுக்குழுக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி வழங்கப்படும். போட்டியை நடத்த விண்ணப்பித்துள்ள நாடுகள், அவற்றில் உள்ள கட்டமைப்பு வசதிகள், செலவிடும் தன்மை போன்றவற்றை பொருத்து வாய்ப்பு கிடைக்கும். வரும் 2022-ஆம் ஆண்டு போட்டி கத்தாரில் நடக்கிறது.

48 நாடுகளாக ...

இந்நிலையில் 2026-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை நடத்த மொராக்கோவும், அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகள் இணைந்தும் விண்ணப்பித்துள்ளன. வாய்ப்பை யாருக்கு வழங்குவது என்பது குறித்த வாக்கெடுப்பு மாஸ்கோவில் நடக்கவுள்ள பிஃபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் நடக்கிறது. உறுப்பினர்களாக உள்ள 207 நாடுகள் இதில் வாக்களிக்க உள்ளன. ஏற்கெனவே பிஃபா ஆய்வுக் குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் பல்வேறு அம்சங்கள் வட அமெரிக்க நாடுகளின் விண்ணப்பத்துக்கு சாதகமாக இருந்தன. இந்த போட்டியில் தான் தற்போதுள்ள 32 நாடுகளுக்கு பதிலாக 48 நாடுகளாக அதிகரிக்கப்படுகிறது. மேலும் பிஃபா-கோக கோலா சர்வதேச தரவரிசைப் பட்டியல் மதிப்பிடும் முறையில் மாற்றங்கள் கொண்டு வருதல், போன்றவை குறித்தும் விவாதித்து அறிவிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து