முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெரினாவில் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்காததில் காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : நல்லடக்கத்திற்கான காரியங்கள் நடைபெறுவதில், நடைமுறை இடர்ப்பாடுகள் வந்து விடக்கூடாது என்பதால், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு எதிரே ராஜாஜி, காமராஜர், முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரது நினைவிடங்களுக்கு அருகே கருணாநிதிக்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு முன்வந்தது. இதில் காழ்ப்புணர்ச்சி ஏதுமில்லை என்று அமைச்சர் ஜெயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

உள்ளம் பதைபதைக்கிறது...

இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

எம்.ஜி.ஆரோடு நெருங்கிய நட்பும், எம்.ஜிஆரின் அன்பான முயற்சியால் அண்ணாவுக்கு பிறகு தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர் என்ற புகழும் பெற்றிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 95 வயதில், முதுமையாலும், உடல்நலக் குறைவாலும் காலமானார் என்ற துயரமான நிகழ்வு நடைபெற்ற சில மணி நேரங்களுக்குள்ளாகவே, முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினின் கடிதத்தில் காணப்படும் அபாண்டமான குற்றச்சாட்டும், நஞ்சை விதைக்கும் பழிச் சொல்லும் கண்டு உள்ளம் பதைபதைக்கிறது.

அண்ணாவின் இதயத்தை கடனாக வாங்கி இருப்பதால் அதை திருப்பித் தருவதற்காக அண்ணா சமாதி அருகே கருணாநிதியை நல்லடக்கம் செய்ய வேண்டியது இன்றியமையாதது என்று அண்ணா சதுக்கத்தில் இடம் கேட்டதாகவும், அந்த வேண்டுகோளை காழ்ப்புணர்ச்சியாலும், ஆட்டுவிப்போரின் சூழ்ச்சியாலும் அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தார் என்று மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் நச்சுக்கருத்து ஒன்றினை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பட்டியலிடுகிறோம்...

மறைந்த ஒரு முதுபெரும் தமிழக அரசியல் தலைவருக்கு உள்ளார்ந்த மரியாதையுடனும், அக்கறையுடனும், அ.தி.மு.க. அரசு செய்திருக்கும் சிறப்புகளை பட்டியலிட்டுக் கூறும் நிலைக்கு மு.க. ஸ்டாலினின் கடிதம் நம்மை தள்ளியிருக்கிறது. சொல்லிக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு சிறிதும் இல்லை. ஆனால், பதிவு செய்வது வரலாற்றுக் கட்டாயம் என்பதால், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழைப் போற்ற, தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இங்கே பட்டியலிடுகிறோம். இறுதிச் சடங்கு நாளான 8-ம் தேதி மாநில அரசு அலுவலகங்கள், மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது. கருணாநிதியின் பூத உடல் மக்களின் பார்வைக்கு ராஜாஜி ஹாலில் வைப்பதற்கு அனுமதி வழங்கியது. அன்னாரது உடலை நல்லடக்கம் செய்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து அவரது இல்லம் செல்வதற்கும், மீண்டும் அங்கிருந்து ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டு மக்கள் பார்வைக்கு வைத்தும், பின்னர் அங்கிருந்து கொண்டு சென்று நல்லடக்கம் செய்யும் வரையிலும் காவல் துறையினர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

7 நாட்களுக்கு....

மத்திய அரசின் உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அனுமதி பெற்று, அரைக் கம்பத்தில் தேசியக் கொடி பறந்தது, சவப் பெட்டி மீது தேசியக் கொடி போர்த்தியது, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது, இறுதிச் சடங்கின் போது குண்டுகள் முழங்கியது, முதலான அரசு மரியாதை செலுத்தப்பட்டது. துக்கம் அனுசரிக்கும் வகையில் 7 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் தேசியக் கொடி பறப்பது மற்றும் அரசு சார்ந்த விழாக்கள் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இரங்கல் செய்தி அரசிதழில் வெளியிடப்பட்டது.

அண்ணாசதுக்கத்தில்...

மெரினா கடற்கரையில் புதிய கல்லறைகள், நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக ஐந்து மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளாக நிலுவையில் இருந்தன. கோடான கோடி மக்களால் அம்மா என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை மெரினா கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தி விடத்  துடித்தவர்கள் தொடுத்த வழக்குகள் தான் அவை ஐந்தும். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் சட்டச் சிக்கல்கள் உருவாகி, கடைசி நேரத்தில் பெரும் குழப்பம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் அண்ணாசதுக்கத்தில் இடம் தருவது இயலாமல் போய், நல்லடக்கத்திற்கான காரியங்கள் நடைபெறுவதில், நடைமுறை இடர்ப்பாடுகள் வந்து விடக்கூடாது என்பதால், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எதிரே இராஜாஜி, காமராஜர், முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரது நினைவிடங்களுக்கு அருகே கருணாநிதிக்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு முன்வந்தது. இதில் ஏது காழ்ப்புணர்ச்சி ?

மனசாட்சி இருக்கிறதா ?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்தை தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைக்குள் திறந்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகடியம் பேசிய தி.மு.க.-வினருக்கு, மெரினா கடற்கரையில் இருந்து அவரது நினைவிடத்தை அப்புறப்படுத்துவோம் என்று மேடை போட்டு பேசிய தி.மு.க.-வினருக்கு மனசாட்சி இருக்கிறதா ? என்ற கேள்வியே எழுகிறது. குத்திக்காட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, சரித்திர நிகழ்வு என்பதற்காகவும், பழமையை மறந்தோர்க்கு எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலமுமே கூட வழிகாட்ட ஒளியின்றி தடுமாற்றம் ஏற்படுத்தி விடும் என்பதற்காக ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

நினைவூட்டுகிறேன்...

காமராஜர் மறைந்த போதும், தமிழ் நாடு முதலமைச்சராகப் பணியாற்றிய ஜானகி அம்மையார் மறைந்த போதும், அவருக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்க அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. முதலமைச்சராகவே இருந்து மரணமடைவோருக்கு மட்டும் தான் மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதி அளிக்கப்படும் என்று வழக்குகள் ஏதும் இல்லாத நிலையிலும் கூட மறுத்தவர் தான் மறைந்த கருணாநிதி என்று அந்த நிகழ்வுகளின் போது அவரிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்து ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள் இன்றும் நம்முடன் வாழ்கிறார்கள் அவர்கள் கூறிய தகவல்கள் தான் இவை என்பதை

நினைவூட்டுகிறேன்.

புரியவே புரியாது...

தாங்கள் ஏதோ போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்ற புத்தபெருமான் போலவும், அப்பழுக்கில்லாமல் ஆட்சி நடத்திய சித்தர்களைப் போலவும், தாங்கள் அள்ளிக் குவித்து வைத்திருக்கும் ஆயிரம் தலைமுறைக்கான செல்வம் தங்கள் அயராத உழைப்பாலும், அறிவுத்திறத்தாலும் வந்தது போலவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது எண்ணற்ற வழக்குகளைப் போட்டு, சிறையில் தள்ளி, சித்ரவதை செய்து அவருக்கு மனவேதனையையும், அவமானத்தையும் பரிசளித்த தி.மு.க.-வினருக்கு, அ.தி.மு.க. அரசின் களங்கமில்லா வெள்ளை உள்ளம் புரியாது. புரியவே புரியாது. ஆனால், அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம் நன்கு புரிந்து கொள்ளும் காட்சிக்கு எளியவர்களாய், கடுஞ்சொல் அற்றவர்களாய், எல்லோர்க்கும் எல்லாமும் ஆகி தமிழகத்தை வலிமை மிக்க எதிர்காலம் நோக்கி வழிநடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், நாங்களும், தி.மு.க. தலைமை பழைய பாதையில் பயணித்து பழிச் சொல் வீசுவது கண்டு கலங்கப் போவதுமில்லை. கடமை தவறப்போவதுமில்லை.  இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து