முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: 521 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

நாட்டிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி சதம் விளாசினார்.

168 ரன்கள்...

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்களில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து 168 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (33 ரன்), கேப்டன் விராட் கோலி (8 ரன்) களத்தில் இருந்தனர்.

3-வது நாள் ஆட்டம்

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நடந்தது. கோலியும், புஜாராவும் அவசரம் காட்டாமல் பொறுமையாக ஆடினர். ‘ஸ்விங்’ தாக்குலை திறம்பட சமாளித்த இவர்கள், வெளியே சென்ற நிறைய பந்துகளை தொடவே இல்லை. ரன்வேகம் மந்தமாக இருந்தாலும் இந்திய அணி வலுவான நிலையை நோக்கி பயணித்தது. நிலைத்து நின்று ஆடிய இவர்களை உணவு இடைவேளை வரை இங்கிலாந்து பவுலர்களால் அசைக்க முடியவில்லை.

 தாக்குப்பிடிக்கவில்லை

அணியின் ஸ்கோர் 224 ரன்களாக உயர்ந்த போது, புஜாரா (72 ரன், 208 பந்து, 9 பவுண்டரி) பென் ஸ்டோக்சின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற குக்கிடம் கேட்ச் ஆனார். அடுத்து துணை கேப்டன் ரஹானே வந்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய விராட் கோலி பவுண்டரி அடித்து தனது 23-வது சதத்தை நிறைவு செய்தார். ஆனால் சிறிது நேரத்தில் விராட் கோலி (103 ரன், 197 பந்து, 10 பவுண்டரி) கிறிஸ் வோக்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (1 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக மட்டையை சுழட்டி அரைசதம் கண்டார். இதற்கிடையே ரஹானே 29 ரன்களிலும் (94 பந்து, 3 பவுண்டரி), முகமது ஷமி 3 ரன்னிலும் வெளியேறினர்.

521 ரன்கள் இலக்கு...

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 110 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பாண்ட்யா 52 ரன்களுடன் (52 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்துள்ளது. 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும். இந்த டெஸ்டில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.

முக்கிய அம்சங்கள்...

*இங்கிலாந்து மண்ணில், ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர் என்ற புதிய சாதனையை விராட் கோலி வசப்படுத்தியுள்ளார். அவர் இந்த தொடரில் இதுவரை 2 சதம், 2 அரைசதம் உள்பட 440 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு தொடரில் இந்திய கேப்டனாக முகமது அசாருதீன் 426 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

*டெஸ்டில் அதிக சதங்கள் எடுத்த இந்தியர்களின் பட்டியலில் தெண்டுல்கர் (51 சதம்), டிராவிட் (36), கவாஸ்கர் (34) ஆகியோருக்கு அடுத்தபடியாக உள்ள ஷேவாக்கை (23) கோலி சமன் செய்துள்ளார்.
*முதல் டெஸ்டில் இரு இன்னிங்சையும் சேர்த்து (149 ரன், 51 ரன்) 200 ரன்கள் எடுத்த கோலி, இந்த டெஸ்டிலும் அதே போன்று மொத்தம் 200 ரன்கள் (97 மற்றும் 103 ரன்) எடுத்துள்ளார்.
* முதல் இன்னிங்சில் 97 ரன்களில் ஆட்டம் இழந்த இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இன்னிங்சிலும் 90 ரன்களை கடந்ததும் கொஞ்சம் பதற்றத்திற்குள்ளானார். 93 ரன்னில் இருந்த போது ஆண்டர்சனின் பந்து வீச்சில் கேட்ச் வாய்ப்பை ‘கல்லி’ திசையில் நின்ற ஜென்னிங்ஸ் கோட்டை விட்டார். பந்து எல்லைக்கோட்டிற்கு ஓடியது. அதன் பிறகு மேலும் ஒரு பவுண்டரி அடித்து கோலி சதத்தை எட்டினார். சதம் அடித்ததும் கேலரியில் இருந்த தனது மனைவி அனுஷ்கா சர்மாவை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து