ஆசிய விளையாட்டு போட்டி: பேட்மிண்டனில் 36 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்றது இந்தியா ! தனிநபர் பிரிவில் சாய்னா பெற்று தந்தார்

திங்கட்கிழமை, 27 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Saina Nehwal 2018 8 27

ஜகார்த்தா : ஜகார்த்தாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளி்ல பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனைகள் சாதித்து வருகின்றனர். 36 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப்போட்டியில் பாட்மிண்டன் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்தியா பதக்கம் வென்றது. இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்று 36 ஆண்டு பதக்க தாகத்தைத் தீர்த்தார். அதுமட்டுமல்லாமல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பத்கம் வென்ற முதல் வீராங்கனை எனும் பெருமையையும் பெற்றார் சாய்னா.

அரையிறுதியில்...

அதேசமயம், பி.வி. சிந்து அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் நிச்சயமாகிவிட்டது என்றாலும்கூட, தங்கம் வெல்வது லட்சியமாகும். பேட்மிண்டன் பிரிவில் மகளிர் ஒற்றையருக்கான அரையிறுதிப்போட்டிகள் இன்று நடந்தன. இதில் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலை எதிர்கொண்டார் சீன தைப்பே வீராங்கனை தாய் ஜூயிங். 32 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் சீன தைப்பே வீராங்கனை தாய் ஜூயிங்கிடம் 17-21, 14-21 என்ற நேர் செட்களில் பரிதாபமாகத் தோல்வி அடைந்தார் சாய்னா நேவால். இதன் மூலம் சீன தைப்பே வீராங்கனையிடம் தொடர்ந்து 10-வது முறையாக சாய்னா தோல்வி அடைந்துள்ளார்.

36 ஆண்டுகளுக்கு...

இதற்கு முன் தொடர்ந்து 9 போட்டிகளைச் சீன தைப்பே வீராங்கனையிடம் சாய்னா தோல்வி அடைந்ததால், இந்த போட்டியில் தகுந்த பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது அவருக்கு 10-வது தோல்வியாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஒற்றையர் பிரிவில் பத்தம் வெல்வது என்பது இந்தியாவின் 36 ஆண்டு கனவாகும். இதற்கு முன் கடந்த 1982-ம் ஆண்டு சயித் மோடி வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார் அதன்பின் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எந்த இந்திய வீரர், வீராங்கனைகளும் பதக்கம் வெல்லாமல் இருந்தனர். இப்போது அதை சாய்னா நிறைவேற்றி இருக்கிறார்.

இறுதியில் பி.வி.சிந்து...

அதைக் காட்டிலும் அடுத்த மகிழ்ச்சியாக இந்தியாவுக்கு வெள்ளி உறுதியாகிவிட்டது என்றாலும், தங்கத்துக்காகச் சிந்து போராடுகிறார். மற்றொரு ஆட்டத்தில், ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியை எதிர்த்து களம்கண்டார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து. 65 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான ஆட்டத்தில், யமாகுச்சியை 21-17, 15-21, 21-10 என்ற செட்களில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிந்து. யமாகுச்சியை ஆசிய விளையாட்டுப்போட்டியில் 2-வது முறையாக வென்றுள்ளார் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டியில் சீன தைப்பே வீராங்கனை தாய் ஜூ யங்குடன் சிந்து மோதவுள்ளார். ஆசிய விளையாட்டுப்போட்டியில் தனிநபர் பிரிவில் இந்தியா பதக்கம் வென்று 36 ஆண்டுகள் ஆகிறது, அதைச் சிந்து உடைத்து, வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து