வருவாய் - பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தொலைநோக்கு திட்ட புத்தகம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      தமிழகம்
cm edapadi book release 2018 8 28 0

சென்னை : வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் 2018 - 2030 புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

தொலைநோக்குத் திட்டம்

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் படி தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் 2018-2030, சென்டாய் கட்டமைப்பு, ஐக்கிய நாடுகளின் நீடித்த நிலையான வளர்ச்சித் திட்ட இலக்குகள் -2030, பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னுரிமை மற்றும் இலக்குகளையொட்டியும், தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டம் -2016 மற்றும் பேரிடர் அபாயத் தணிப்பு குறித்து ஆசிய நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான மாநாட்டில் பிரதமர் மோடியால் வெளியிடப்பட்ட பத்து அம்ச செயல் திட்டம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இப்பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு அம்சங்களுடன்...

பேரிடர்களால் ஏற்படும் தாக்கம், பாதிப்புகள், அபாயங்கள் குறித்த மதிப்பீடுகள், அதன் தணிப்புக்கான இயற்கையொட்டிய முறையான அணுகுமுறைகள், நிர்வாக கட்டமைப்பு, பேரிடர்களை எதிர்கொள்வதற்கான முறைகள், அபாயங்களை தடுக்க மற்றும் தணிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், பாதிப்புகளை சீரமைத்தல், பேரிடர் இழப்பீடு வழங்குதல் மற்றும் புனர்வாழ்வு, பேரிடர் அபாயத் தணிப்பை அடிப்படையாகக் கொண்டு மாநிலத்தின் இதர வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல், நெறிப்படுத்துதல், நிதி ஆதாரங்கள், தொலைநோக்குத் திட்டம் போன்ற பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் 2018-2030 தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்.ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிருவாக ஆணையர் சத்யகோபால் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் ராஜேந்திர ரத்னூ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து