கேரள சட்டசபை சிறப்பு கூட்டம்: அரசை விமர்சித்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேருக்கு பேச அனுமதி மறுப்பு

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      இந்தியா
Kerala assembly 30-08-2018

திருவனந்தபுரம்,கேரளாவை உலுக்கி எடுத்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி 483 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும், நேற்று நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார். அணைகள் திறப்பு விவகாரத்தில் மாநில அரசை கடுமையாக விமர்சித்து வரும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருவருக்கு பேச சட்டப்பேரவையில் அனுமதி வழங்கப்படவில்லை.வெள்ள பாதிப்பு குறித்து விவாதிப்பதற்காக கேரள மாநில சட்டசபை சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது:-
கேரளாவில் இந்த நூற்றாண்டில் இல்லாத அளவு மிக மோசமான மழை பெய்துள்ளது. மொத்தம் 483 பேர் உயிரிழந்துள்ளனர். வானிலை மையம் மழை குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டபோதிலும் கட்டுப்படுத்த முடியாத மழையால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பெரு வெள்ளம் கேரளாவை பெரும் துயருக்கு ஆளாக்கியது என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் வி.டி சதிஷன், முன்னாள் அமைச்சர் தாமஸ் சாண்டி,  கே.எம். மாணி ஆகியோர் பேசினர். 

இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினர். அதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் பேசினர். அதே சமயம் வெள்ள பாதிப்பு தொடர்பாக மாநில அரசை கடுமையாக விமர்சித்து வரும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.க்களான ராஜூ ஆபிரகாம் மற்றும் சாஜி செரியன் ஆகியோருக்கு சட்டசபையில் பேச அனுமதி வழங்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து