இன்று முதல் அமுல்: மோட்டார் இன்சூரன்ஸ் பட்ஜெட் அதிகரிக்கும்

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018      இந்தியா
bike car 31-08-2018

புதுடெல்லி, கார் மற்றும் இரண்டு சக்கர வாகன உரிமையாளர்கள் செப்டம்பர் 1 முதல் ஒரு ஆண்டுக்கான மோட்டார் இன்சூரன்ஸினை வாங்க முடியாது. மூன்று வருடத்திற்கான பாலிசிகளை மட்டுமே வாங்க முடியும்.காப்பீட்டு நிறுவனங்கள் ஒருவருடத்திற்கான பாலிசிகளை எல்லாம் மூட்டை கட்டி தூக்கிப்போட்டு விட்டு 5 வருடம் மற்றும் 3 வருடங்களுக்கான மோட்டார் இன்சுரன்ஸ் பாலிசிகளை மட்டுமே இனி விற்பார்கள்.

கார் உரிமையாளர்களால் குறைந்தது 3 வருடத்திற்கான இன்சூரன்ஸ் பாலிசிகளை மட்டுமே வாங்க முடியும். அதே நேரம் இரண்டு சக்கர வாகன உரிமையாளர்கள் 5 வருடத்திற்கான பாலிசிகளை வாங்க வேண்டும்.

இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று ஒரு வருட மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிகள் இனி செப்டம்பர் 1 முதல் வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்தது. இனி புதியதாக வாங்கும் வாகனங்கள் மற்றும் இன்சூரன்சினை புதுப்பிக்க விரும்பும் வாகன உரிமையாளர்கள் 3 வருடங்கள் முதலான பாலிசிகளை மட்டுமே வாங்க முடியும் என்றும் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

1000 சிசி வரையிலான கார் வைத்துள்ளவர்கள் தற்போது 1 வருடத்திற்கு 1,850 ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசிகளைப் பெற்று வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் 5,286 ரூபாய் செலுத்தி 3 வருடத்திற்கான காப்பீட்டினை பெற வேண்டும்.இதுவே 1000-1500 சிசி கார் உரிமையாளர்கள் 2,863 ரூபாய்க்கு இன்சூரன்ஸ் 1 வருட இன்சூரன்ஸினை பெற்று வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் 9,534 ரூபாய் செலுத்தி 3 வருட காப்பீட்டினை பெற வேண்டும்.

1,500 சிசிக்கும் அதிகமான வாகன உரிமையாளர்கள் 3 வருடத்திற்கு 24,305 ரூபாய்க்குக் காப்பீட்டினை பெற வேண்டும். இதுவே முன்பு 1 வருடத்திற்கு 7,890 ரூபாயாக இருந்தது.ஆண்டுக்கு 427 ரூபாய்க்கு மோட்டார்ஸ் இன்சூரன்ஸ் பெற்று வந்த நிலையில் 75சிசி வரையிலான 2 சக்கர வாகன உரிமையாளர்கள் செப்டம்பர் 1 முதல் 1,045 ரூபாய் செலுத்தி 5 வருடத்திற்கான பாலிசியினைப் பெற வேண்டும்.

75சிசி -150சிசி வரையிலான 2 சக்கர வாகன உரிமையாளர்கள் ஆண்டுக்கு 720 ரூபாய்க்கு காப்பீடுகளைப் பெற்று வந்த நிலையில் இன்று முதல் 3,285 ரூபாய்க்கு 5 வருட காப்பீட்டினை பெற வேண்டும்.

150சிசி -350சிசி வரையிலான 2 சக்கர வாகன உரிமையாளர்கள் ஆண்டுக்கு 985 ரூபாய்க்கு ஆண்டுக் காப்பீட்டினை பெற்று வந்த நிலையில் இனி 5 வருடத்திற்கு 5,453 ரூபாய் செலுத்தி 5 வருட மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டும்.350 சிசிக்கும அதிகமான திறன் கொண்ட இரண்டு சக்கர வாகன உரிமையாளர்கள் இதுவரை 2,323 ரூபாய்க்கு வாகன காப்பீட்டினை பெற்று வந்த நிலையில் இனி 5 வருடத்திற்கு 13,034 ரூபாய் எனப் பாலிசியினை வாங்க வேண்டும்.

மூன்றாம் தரப்பு மோட்டார் இன்சூரன்ஸ் வாகன உரிமையாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் ஆகும். இந்தத் திட்டங்களின் பாலிசி பெற்று இருக்கும் போது வாகனம் விபத்துகளின் போது சேதம் அடைந்தால் அதனைச் சரி செய்வதற்கான கட்டணங்களை இதன் கீழ் பெற முடியும்.

சென்ற ஜூலை 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் அனைத்து வாகனங்களுக்கும் பல வருட மூன்றாம் தரப்பு காப்பீடு கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. தினம் இந்திய சாலைகளில் 18 கோடி நபர்கள் வாகனங்களில் பயணிக்கும் நிலையில் 3-ல் ஒரு வாகனம் மட்டுமே காப்பீடு பெறப்பட்டுள்ளதால் அதனை அதிகரிக்கவே இந்த முறை எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து