முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பம் : நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே படுதோல்வி - குரல் வாக்கெடுப்பில் ரணில் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் கூச்சல்-குழப்பத்திற்கிடையே ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் வெற்றிபெற்றதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார்.

நிரூபிக்க தயார்

கடந்த மாதம் 26-ம் தேதி ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக சுதந்திரா கட்சி தலைவரும், அதிபருமான சிறிசேனா அறிவித்தார். அதோடு பிரதமராக இருந்த ரணிலை பதவி நீக்கம் செய்தார். மேலும் கடந்த 3 ஆண்டுகளாக அரசியல் எதிரியாக இருந்த ராஜபக்சேவை அழைத்து பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் இதை ரணில் ஏற்கவில்லை. பாராளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாகவும், எனவே பாராளுமன்றத்தை கூட்டினால் மெஜாரிட்டியை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.

தேர்தல் அறிவிப்பு

இதனை அடுத்து அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதி வரை முடக்கி வைப்பதாக அறிவித்தார். இதற்கு ரணில் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கடந்த 2-ம் தேதி 119 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு கடிதம் கொடுத்தனர். இதனால் சிறிசேனா கடந்த 9-ம் தேதி இலங்கை பாராளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். மேலும் பாராளுமன்றத்துக்கு ஜனவரி 5-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இடைக்கால தடை

இதை எதிர்த்து ரணில் கட்சி சார்பில் இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பாராளுமன்ற கலைப்புக்கு இடைக்கால தடை விதித்து தேர்தல் நடத்தவும் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து பாராளுமன்றத்தை உடனே கூட்ட ரணில் கோரிக்கை விடுத்தார். அதனை சபாநாயகர் ஜெயசூர்யா ஏற்றுக் கொண்டார். அதன்படி நேற்று பாராளுமன்றம் கூட்டப்பட்டது. காலை 10 மணிக்கு 225 எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்கு வந்தனர். 

ராஜபக்சே வெளிநடப்பு

இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில் ரனில் விக்ரமசிங்க கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்திருந்தனர். அப்போது, ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் ராஜபக்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

குரல் ஓட்டெடுப்பு

இதையடுத்து பாராளுமன்றத்தில் மண்டல வாரியாக குரல் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஓட்டெடுப்பில் நம்பிக்கையில்லா  தீர்மானத்தை ஆதரித்து 122 பேர் வாக்களித்தனர். அவர்கள் ரணிலுக்கு தங்கள் ஆதரவு என தெரிவித்து கடிதமும் கையெழுத்திட்டு வழங்கினர். இதனால் ராஜபக்சேவுக்கு படுதோல்வி ஏற்பட்டது. ராஜபக்சேவுக்கு 103 எம்.பி.க்கள் ஆதரவு மட்டுமே இருந்தது.

ஆட்சி மாற்றம்...

ஓட்டெடுப்பு முடிந்ததும் ராஜபக்சேவுக்கு பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவு இல்லை என்று சபாநாயகர் அறிவித்தார். இதற்கு ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் கடும் கூச்சல் - குழப்பம் நிலவியதையடுத்து இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து  இலங்கையில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. ரணில் மீண்டும் பிரதமராக வாய்ப்பு உருவாகி உள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து