எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில வழி புதிய கல்வி திட்டம் துவக்க விழா :அமைச்சர் ஜி.பாஸ்கரன் பங்கேற்பு

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      சிவகங்கை
21 minster baskeran news

  சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டம், தமறாக்கி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் மூலம் எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில வழி புதிய கல்வி திட்டம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார். மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் புதிய கல்வி திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில்,
                        இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின்         வழிகாட்டுதலின்படி, செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் நல்வழிகாட்டுதலுடன் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயலாற்றி வருகிறது. கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் நிலையான சொத்தாகும். அதை முழுமையாக கற்றுக்கொண்டால் எங்கு சென்றாலும் வெற்றி பெறலாம். அதை முழுமையாக நிறைவேற்றும்விதமாக எண்ணற்ற திட்டங்களை இலவசமாக மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி வந்தபோதும் ஆங்கில வழி கல்வி அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு தேவைப்படும் நிலையில் வசதி படைத்தவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வருகிறார்கள். வசதி இல்லாத வறியவர்கள் தங்கள் பிள்ளைகளை பணம் செலுத்தி படிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் ஏழை மாணவர்களின் மனதில் ஆங்கில கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்து வந்தது. அதை உணர்ந்து மாண்புமிகு அம்மாவின் அரசு வசதி படைத்தவர்களுக்கு இணையாக வறியவர்களின் குழந்தைகளும் எவ்வித கட்டணமின்றி ஆரம்ப முதல் ஆங்கில வழி கல்வியை கற்று பயன்பெற வேண்டும் என்ற நோக்குடன் மற்ற மாநிலங்களே திரும்பி பார்க்கும் வண்ணம் தமிழகத்தில் எல்.கே.ஜி. முதல் ஆங்கில கல்வி வகுப்பு அரசு நடுநிலைப்பள்ளிகளில் துவக்க திட்டமிட்டு இன்று மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியுடன் துவக்கப்பட்டுள்ளது.
        இதன் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்கள் பேருந்து மற்றும் பள்ளி வேனில் தொலை தூரத்தில் சென்று பயணம் செய்து கல்வி கற்று வருவதால் உடற்சோர்வு ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்த சிரமமாக இருக்கும் நிலை முற்றிலும் தவிர்க்கப்படும். மேலும் ஒரு நாட்டின் வளர்ச்சி கல்வித்துறையைச் சார்ந்துள்ளது. ஆகையால் மாணவர்களாகிய நீங்கள் நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொண்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் படிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் நாமும் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயமும் முன்னேற்றம் பெறும். அதனடிப்படையில் தற்பொழுது மாவட்ட அளவிலுள்ள நடுநிலைப்பள்ளிகளின் அருகாமையிலுள்ள அங்கன்வாடி மையங்களை இணைத்து அங்கு பயின்று வரும் குழந்தைகளுக்கு ஆங்கில வழி கல்வி வழங்கும்விதமாக இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 22 நடுநிலைப்பள்ளிகளில், தேவகோட்டையில் 24 நடுநிலைப்பள்ளிகளில், திருப்பத்தூரில் 23 நடுநிலைப்பள்ளிகளில் என ஆக மொத்தம் 69 நடுநிலைப்பள்ளிகளில் அங்கன்வாடி மையங்கள் இணைக்கப்பட்டு புதிய ஆங்கில கல்வி முறை திட்டத்தில்  1,585 மாணவ, மாணவியர்கள் சேர்க்கப்பட்டு ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் வீட்டின் அருகாமையிலே எவ்விதக் கட்டணமின்றி ஆங்கில வழி கல்வியை கற்றுக் கொள்ளமுடியும். இதனை பெற்றோர்கள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென   கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
      இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர்இராஜேந்திரன், சிவகங்கை வட்டார கல்வி அலுவலர் பால்ராஜ், தமறாக்கி ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் துர்காபாய், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் பாண்டி, அய்யனார், பலராமன், சசிக்குமார், கல்வி குழுத்தலைவர் சிவசுப்பிரமணியன், கல்வி குழு உறுப்பினர்கள் ரவி, முத்தையா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து