3-வது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவை ஏற்க தயார் : சந்திரசேகர ராவ் கட்சி அறிவிப்பு

புதன்கிழமை, 15 மே 2019      இந்தியா
chandrasekhara-rao2018-08-23

Source: provided

ஐதராபாத் : 3-வது அணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவை ஏற்க தயார் என்று சந்திரசேகர ராவ் கட்சி அறிவித்துள்ளது.  

மத்தியில் அடுத்து பாரதிய ஜனதா, காங்கிரஸ் அல்லாத புதிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரும், தெலுங்கானா மாநில முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் கூறி வருகிறார்.

 இந்நிலையில் மத்தியில் புதிய ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தால் அதை ஏற்க தயார் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபித்ரசூல்கான் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-

மாநில கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, “கூட்டாட்சி முன்னணி” உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். அவரை எங்கள் கட்சித் தலைவர் சந்திரசேகரராவ் அடுத்த வாரம் சந்தித்து பேச உள்ளார்.

மத்தியில் அடுத்து மாநில கட்சிகளின் கூட்டாட்சி முன்னணிதான் ஆட்சியை பிடிக்கும். ஒரு வேளை மத்தியில் அரசைமைக்க எங்களுக்கு போதிய எம்.பி.க்கள் பலம் இல்லாமல் போகும் பட்சத்தில் காங்கிரசின் உதவியை நாடுவோம். காங்கிரஸ் கட்சி எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்வோம்.

காங்கிரஸ் அளிக்கும் ஆதரவு வெளியில் இருந்து தான் இருக்கும். எங்கள் அரசில் காங்கிரஸ் பங்கு பெறாது. காங்கிரசுக்கு எந்த ஒருஅதிகாரத்தையும் நாங்கள் கொடுக்க மாட்டோம்.ஆட்சி, அதிகாரத்தை நடத்தும் டிரைவர் சீட்டில் மாநில கட்சிகள்தான் இருக்கும். எனவே காங்கிரஸ் ஆதரவு கொடுத்தாலும் புதிய அரசு கூட்டாட்சி முன்னணியின் அரசாகத் தான் இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து