அப்டேட் முடிந்தது: அனுமதிக்கு காத்திருக்கும் போயிங் விமானங்கள்

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      உலகம்
Boeing Flights 2019 05 17

நியூயார்க், போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானங்களில் அனைத்து மென்பொருள் அப்டேட்டுகளும் முடிந்ததாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

157 பேர் பலி...

இந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 189 பேர் பலியாகினர். இதேபோல் கடந்த மாதம் எத்தியோபியன் ஏர் விமானம் விபத்துக்கு உள்ளானதில் 157 பேர் பலியாகினர்.  இந்த இரு விமானங்களும் 737 மேக்ஸ் ரக போயிங் விமானங்கள் ஆகும். இவ்விரு விபத்துகளும் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் இந்த 737 மேக்ஸ் ரக விமானங்களை தரை இறக்கியது. 
அப்டேட் முடிந்தது...

இந்த விபத்துகளுக்கு  விமானத்தை கையாளும் அமைப்பு பழுதானதே காரணம் என கண்டறியப்பட்டது. இதனால் 737 மேக்ஸ் ரக விமானங்களை அப்டேட் செய்ய பல முயற்சிகளை போயிங் நிறுவனம் மேற்கொண்டது. தற்போது 737 மேக்ஸ் ரக விமானங்களில் அனைத்து மென்பொருள் அப்டேட்டுகளும் முடிந்துள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒப்புதல் பெற...

விமானங்கள் மீண்டும் சேவைக்கு செல்லும் முன் அமெரிக்க மற்றும் சர்வதேச விமான கட்டுப்பாட்டாளர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும்.  விமானங்களின் அனைத்து தொழில்நுட்பங்களும், மென்பொருள் அப்டேட்டுகளும் முடிந்துள்ளன. விமானம் இறுதி ஒப்புதலுக்காக தயார்படுத்தப்பட்டு வருகிறது என தலைமை நிர்வாகி டென்னிஸ் முய்லேன்பர்க் தெரிவித்துள்ளார்.

360 மணி நேரம்...

விமானங்களில் தானியங்கி முறையில் செயல்படும் பாதுகாப்பு அமைப்புகள் மென்பொருள் மூலம் அப்டேட் செய்யப்பட்டு சுமார் 207  737 மேக்ஸ் ரக விமானங்கள் சுமார் 360 மணி நேரங்களுக்கு சோதனை செய்யப்பட்டதாக போயிங் தெரிவித்துள்ளது.

ஒப்புதல் அளித்த...

அமெரிக்கா ஒப்புதல் அளித்த பின்னர், 737 மேக்ஸ் ரக விமானங்களை சர்வதேச அளவில் மீண்டும் இயக்க அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என ஃபெடரல் நிர்வாக அமைப்பின் டேனியல் எல்வேல் கூறினார். இதனை போயிங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து