பார்லி. இறுதிகட்ட தேர்தல்: 59 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளிக்கிழமை, 17 மே 2019      இந்தியா
Parliamentary election announce 2019 03 07

புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலின் 7-ம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு 59 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

8 மாநிலங்களில்...

பாராளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. இறுதியாக 7-ம் கட்ட தேர்தல் நாளை (19-ம் தேதி) நடைபெற உள்ளது. 8 மாநிலங்களில் மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதிகபட்சமாக பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சண்டிகர் மாநிலத்தில் மீதமுள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் அன்றைய தினமே தேர்தல் நடக்க உள்ளது.

கூடுதல் பாதுகாப்பு...

7-வது கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் 59 தொகுதிகளில் வாரணாசி, பாட்னா சாகிப், சண்டிகர், இந்தூர், அமிர்தசரஸ், கோரக்பூர், காசியாப்பூர் ஆகிய தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளாகும். இந்த தொகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மேற்கு வங்காள மாநிலத்துக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இறுதிக்கட்ட பிரசாரம்...

இந்நிலையில், இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனையொட்டி முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வன்முறை காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் நேற்று முன்தினம் இரவு 10 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.

4 சட்டமன்ற தொகுதி...

அதேபோல் தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் சட்டமன்ற தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், கடந்த மாதம் 18-ம் தேதி நடந்த மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலின்போது மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்ட 13 வாக்குச்சாவடிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தலைவர்கள் தீவிரம்...

இந்த நிலையில், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து