முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

22 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது அ.தி.மு.க. - மு.க. ஸ்டாலினின் முதல்வர் கனவு தகர்ந்தது

வியாழக்கிழமை, 23 மே 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதன் மூலம் மு.க. ஸ்டாலினின் முதல்வர் கனவு தகர்ந்து போனது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதாவது, பூந்தமல்லி(தனி), பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம்(தனி), ஆம்பூர், ஓசூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர்(தனி), நிலக்கோட்டை(தனி), திருவாரூர், தஞ்சாவூர், மானாமதுரை(தனி), ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), சாத்தூர், பரமக்குடி(தனி), விளாத்திகுளம், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம்  செய்து பிரச்சாரம் செய்தனர். இதே போல் தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் மேற்கண்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகளும் நேற்று எண்ணப்பட்டன.
9 இடங்களில் வெற்றி

இதில் நிலக்கோட்டை(தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழியும், சோளிங்கர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சம்பத்தும், விளாத்திகுளம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரூர்(தனி) தொகுதி, மானாமதுரை(தனி) தொகுதி, சூலூர் தொகுதி மற்றும் சாத்தூர், பாப்பிரெட்டிபட்டி, பரமக்குடி ஆகிய தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி முகத்தில் உள்ளனர். அதாவது, போட்டியிட்ட 22 தொகுதிகளில் 9 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

9 இடங்கள் தேவை...

234 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தமிழக சட்டசபையில் தற்போதைய எண்ணிக்கை 212 ஆகும். இதில் அ.தி.மு.க.வின் பலம் சபாநாயகரை சேர்த்து 111 ஆக உள்ளது. இவர்களில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை கழித்துப் பார்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 109 ஆக உள்ளது. எனவே அ.தி.மு.க. அரசு மெஜாரிட்டி பெற அதிகபட்சமாக 9 இடங்கள் தேவைப்பட்டது. அந்த 9 இடங்களை தற்போது நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கைப்பற்றி விட்டதால் இனி அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

பொய்யாகிப் போனது...

இதனிடையே அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்த அரசு தொடர வாய்ப்பளித்த மக்களுக்கு கட்சி சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். முன்னதாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது இந்த தேர்தல் மூலம் அ.தி.மு.க. அரசு கவிழ்ந்து விடும் என்று பிரச்சாரம் செய்தார். மேலும் அவரது கட்சியினர் ஜூன் 3-ம் தேதி மு.க. ஸ்டாலின் முதல்வராவார் என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பு இந்த தேர்தல் மூலம் பொய்யாகிப் போனது. மு.க. ஸ்டாலினின் முதல்வர் கனவும் தவிடுபொடியாகிப் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சரவை...

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் 37 தொகுதிகளை கைப்பற்றிய போதும் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியோடு இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காரணம் மத்தியில் காங்கிரஸ் வெற்றி  பெறும். அவ்வாறு வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் தி.மு.க.வை இடம்பெற வைத்து விடலாம் என்று மு.க. ஸ்டாலின் கணக்கு போட்டிருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்திருப்பதால் அவரது மத்திய அமைச்சரவை கனவும் தகர்ந்து போனது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து