சபரிமலை : பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளின் போது கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அப்போது பல ஆயிரக் கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் 1-ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.
நடை திறப்பு
இந்த நிலையில் சபரிமலை கோவிலில் சுவாமி ஐயப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார். நேற்று முன்தினம் சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.
பக்தர்கள் குவிந்தனர்
நேற்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு பிரதிஷ்டை தின விசேஷ பூஜைகள் நடைபெற்றது. சபரிமலை கோவிலில் நடைபெற்ற பிரதிஷ்டை தின பூஜையை யொட்டி சபரிமலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் தலையில் இருமுடி கட்டு சுமந்து சென்று சரணகோஷம் முழங்க சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். அதன் பிறகு இரவு அரிவராசனம் பாடல் பாடப்பட்டு ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்படும்.
15-ல் மீண்டும் திறப்பு
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதே சமயம் இதற்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் கோவில் நடை திறக்கும் போது எல்லாம் சபரிமலையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்படும். இதன் காரணமாக சபரிமலையில் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அதன் பிறகு ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை மீண்டும் வருகிற 15-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.