உலக கோப்பை 26-வது லீக் ஆட்டம்: புதிய சாதனை படைத்த வங்கதேசம்: முதல் இடத்திற்கு முன்னேறிய ஆஸி.

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2019      விளையாட்டு
Australia Team 2019 06 21

Source: provided

லண்டன் : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வார்னரின் சதத்தால் ஆஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றியை பதிவுசெய்துள்ளது. 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், உலக கோப்பை போட்டியில் வங்கதேசம் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

பேட்டிங் தேர்வு...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 26-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, வங்கதேச அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ஞ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் ஃபின்ஞ் ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து 100 ரன்களை கடந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது அரைசதம் கடந்த ஃபின்ஞ் 53 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

2-வது சதம் விளாசல்...

பின்னர் வார்னருடன் ஜோடி சேர்ந்த உஸ்மான் குவாஜா வங்கதேச பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்தார். அபாரமாக விளையாடிய வார்னர், உலகக் கோப்பையில் 2-வது முறையாக சதம் விளாசி அசத்தினார். அத்துடன் ஒருநாள் அரங்கில் தனது 16-வது சதத்தை பூர்த்தி செய்த வார்னர் 147 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸர், 14 பவுண்டரிகள் விளாசி 166 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

381 ரன்கள் குவிப்பு...

உஸ்மான் குவாஜா 89 ரன்களில் ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர். 49-வது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக தடைபட்டது. பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்கள் குவித்தது. வங்கதேச தரப்பில் சௌமியா சர்கார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

குல்டர் நைல்...

382 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி, ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்தை சந்தித்தது. தொடக்க ஆட்டக்காரர் சௌமியா சர்கார் 10 ரன்களில் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷகிப் அல் ஹசன், 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த தமீம் இக்பாலும் அரைசதம் கடந்து 62 ரன்களில் வெளியேறினார். 300 ரன்களை கடந்து வெற்றி இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடிக்கொண்டிருக்கும் போது 46-வது ஓவரில் குல்டர் நைல் வீசிய பந்தில் முகமதுல்லா, சபீர் ரஹ்மான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெற்றியை பறிகொடுத்தனர்.

333 ரன்கள்...

ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருக்க பொறுப்புடன் ஆடிய முஸ்தபீர் ரஹீம் சதம் விளாசி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்திக்கொண்டிருந்தார். உலகக் கோப்பையில் முதல் சதத்தையும் ஒருநாள் அரங்கில் 7-வது சதத்தையும் பதிவு செய்து ஆறுதல் அளித்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வங்கதேச அணியால் 333 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வங்கதேசத்தின் அதிக பட்ச ஸ்கோராக இது பதிவானது. இறுதியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா நடப்பு உலகக் கோப்பையில் 5-வது வெற்றியை பதிவு செய்து பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

நடப்பு உலகக் கோப்பையில் 2-வது சதத்தை பதிவு செய்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உதவிய வார்னர் 3-வது முறையாக ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து