இந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      இந்தியா
hajj pilgrims 2019 06 25

புது டெல்லி : மெக்கா - மதினா நகரங்களில் இந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செய்ய சவுதி அரேபியா அரசு அனுமதியளித்துள்ளது. இவர்களில் 48 சதவீதம் பெண்கள் என முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

முகமது நபியின் பிறப்பிடமான மக்கா நகரம் மற்றும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மதினா ஆகிய இடங்களுக்கு இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் சவுதி அரேபியா நாட்டுக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், பிறநாடுகளில் பத்து லட்சம் பேர் மக்கள்தொகையின் அடிப்படையில் ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசாங்கம் முன்னர் அனுமதி அளித்து வந்தது. இம்முறையில், ஒரு கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் ஆண்டிற்கு ஒரு முறை ஹஜ் பயணம் செய்ய முடியும். இதன் அடிப்படையில், இந்தியாவில் இருந்து கடந்த (2018) ஆண்டு ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 75 ஆயிரமாக உயர்ந்தது. இந்நிலையில், சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக 2 லட்சம் இந்தியர்கள் இந்த ஆண்டு சவுதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 48 சதவீதம் பெண்கள் என்று மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று தெரிவித்துள்ளார்.

மேலும், மெஹ்ரம் எனப்படும் ஆண்களின் துணை இல்லாமல் ஹஜ் யாத்திரை செல்ல விண்ணப்பித்திருந்த 2340 பெண்களின் விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் சேர்க்கப்படாமல் முன்னுரிமை அடிப்படையில் நேரடியாக அனுமதி அளிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். இவர்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் யாத்ரீகர்கள் இந்திய ஹஜ் கமிட்டியின் மூலமாக ஹஜ் செய்யவுள்ளனர். இது தவிர தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் மூலமாக 60 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 21 விமான நிலையங்களில் இருந்து சுமார் 500 விமானங்கள் மூலம் இவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். ஹஜ் யாத்திரை செல்லும் இந்தியர்களுக்காக மக்காவில் 16 சுகாதார மையங்களும், மதினாவில் 3 சுகாதார மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து