முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருவாயை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சத அகவிலைப்படி உயர்வு - சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க வாழ்க்கை தரத்தை உயர்த்த 2 லட்சம் நெசவாளர்களுக்கு அகவிலைப்படியில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும் என்று சட்ட சபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண்.110 விதியின் கீழ் நேற்று  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களது வருவாயை அதிகரித்து வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் நெசவாளர்கள் தற்போது பெற்று வரும் அகவிலைப்படியில் 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். இதனால் 1,137 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உள்ள சுமார் 2 லட்சம்  கைத்தறி நெசவாளர்கள், ஆண்டு ஒன்றுக்கு 1.4 கோடி ரூபாய் அளவுக்கு பயன் பெறுவார்கள்.

விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி, சேலை ஒன்றுக்கு 39 ரூபாய் 27 காசுகளில் இருந்து 43 ரூபாய் ஒரு காசாகவும், வேட்டி ஒன்றுக்கு 21 ரூபாய் 60 காசுகளில் இருந்து 24 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்,. பெடல் தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி, சேலை ஒன்றுக்கு 85 ரூபாய் 67 காசுகளில் இருந்து 90 ரூபாய் 29 காசுகளாகவும், வேஷ்டி ஒன்றுக்கு 65 ரூபாய் 75 காசுகளில் இருந்து 69 ரூபாய் 58 காசுகளாகவும் உயர்த்தி வழங்கப்படும். அதே போன்று விலையில்லா சீருடை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி, மீட்டர் ஒன்றுக்கு 11 ரூபாய் 32 காசுகளில் இருந்து 12 ரூபாய் 16 காசுகளாக அம்மாவின் அரசால் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 54 ஆயிரம் விசைத்தறி மற்றும் 10 ஆயிரத்து  500 பெடல் தறி கூலி தொழிலாளர்கள் சுமார் 11 கோடியே 23 லட்சம் ரூபாய் அளவிற்கு பயன்பெறுவார்கள். தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் நபார்டு வங்கி மறு உதவி திட்டத்தின் கீழ் நடைமுறை மூலதனத்தை காசு கடனாக பெற்று வருகின்றனர். அத்தகைய கடனுக்கு தற்போதைய தமிழ்நாடு அரசு 4 ரூபாய் மானியமாக வழங்கி வருகிறது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த புதிய ஜவுளி கொள்கை 2019-ல் அறிவிக்கப்பட்டவாறு வட்டி சுமையினை குறைக்கும் விதமாக தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி மானியம் 4 விழுக்காடில் இருந்து 6 விழுக்காடாக உயர்த்தப்படும். இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ஏற்படும் செலவினம் 14 கோடியே 40 லட்சம் ரூபாயில் இருந்து 21 கோடியே 60 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பாதுகாவலனாக விளங்கும் "பனை மரங்களுக்கு’’ அம்மாவின் அரசு முக்கியத்துவம் அளித்து, வறட்சி மிகுந்த மானாவாரி மற்றும் கடற்கரை பகுதிகளில் பனை மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்கு, முதற்கட்டமாக நடப்பாண்டில் 10 கோடி ரூபாய் செலவில் 2.5 கோடி பனை விதைகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்படும். இப்பணி வருங்காலங்களிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் நிலவும் தட்பவெட்ப நிலை, மிக நீள இழை பருத்தி சாகுபடிக்கு உகந்ததாக உள்ளதாலும், இந்த ரகங்களை சாகுபடி செய்தால், பருத்தி விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்கும் என்பதாலும், நடப்பாண்டில், மிக நீள இழைப்பருத்தி ரக விதைகள், உயிர் உரங்கள், பருத்தி அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடுபொருட்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து