திருவனந்தபுரம் : வரும் 23-ம் தேதி வரை கேரளாவில் கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்ட மக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை வரும் 23-ம் தேதி வரை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது. கடற்பகுதியில் காற்று பலமாக வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொன்னானி பகுதியில், மழை காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இரண்டு மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் இடுக்கியின் பீர்மேடு, கோழிக்கோட்டில் தலா 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மலப்புரம் மாவட்டத்தின் பொன்னானி பகுதியில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், பல வீடுகள் சேதமடைந்தன. மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
கனமழை காரணமாக இடுக்கி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2.5 அடி உயர்ந்து 2307.12 அடியாக உள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 2,403 அடியாகும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 112.2 அடியை எட்டியுள்ளது. மேலும் மலங்கானா அணை, அருவிக்காரா அணை, இடுக்கியின் பம்பலா அணை, திருச்சூர் மாவட்டத்தின் பெரின்கர்குத்து அணை, பொன்னானி அணை ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.திருவனந்தபுரத்தில் உள்ள கரமன நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பம்பா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. கடைகள் சேதமடைந்தன.
கோழிக்கோடு, இடுக்கி தவிர்த்து, வயநாட்டிற்கும், வரும் 22-ம் தேதி வரை இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. இங்கு 20 செ.மீ. வரை மழை பதிவாகும் என எச்சரித்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் நேற்று வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆழப்புலா, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்கோடு மாவட்டங்களில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக காசர்கோடு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.